Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரட்டை வேடம்! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரட்டை வேடம்! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் குற்றச்சாட்டு

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புறச் சிதைப்பையும், அகச்சிதைப்பையும்
சமாந்தரமாக மேற்கொள்கின்றது என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக
விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர்
வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் கூட்டு முயற்சி

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தினால் காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ம்
பிரிவின் கீழ் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2430 ம் இலக்க
வர்த்தமானி அறிவிப்பை தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த கடும் எதிர்ப்பினால் மீளப் பெறப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக காணி அமைச்சர் சட்டமா
அதிபருடன் கலந்தாலோசிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இது தமிழ் மக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி எனலாம்.
கூட்டு முயற்சிகளின் மூலம் இயலாத காரியங்களையும் நடைமுறைப்படுத்திக் காட்டலாம்
என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடமாகாணத்திலுள்ள 5940 ஏக்கர் காணி
சுவீகரிக்கப்படவிருந்தது.

மூன்று மாத காலத்திற்குள் தகுந்த ஆதாரங்களுடன் உரிமை
கோராது விட்டால் அது சுவீகரிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆரம்பத்தில்
வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இரத்துச் செய்வதாக அரசாங்கம்
கூறியிருந்தது. இரத்துச் செய்தல் போதியதல்ல. வர்த்தமானி அறிவித்தல் மீளப்
பெறப்படல் வேண்டும் என தமிழ்த் தரப்பு கோரிக்கை விடுத்ததினாலேயே தற்போது மீளப்
பெறுதல் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காணிப்பதிவு

இது நடைமுறைக்கு வரும் வரை
அரசாங்கத்தின் கூற்றை உண்மையென நம்ப முடியாது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் குறிப்பாக கடற்கரையையொட்டி இந்தக் காணிகள்
சுவிகரிக்கப்பட இருந்தன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 3669 ஏக்கர் காணிகளும் ,
முல்லைத் தீவு மாவட்டத்தில் 1,703 ஏக்கர் காணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில்
515 ஏக்கர் காணிகளும், மன்னார் மாவட்டத்தில் 543 ஏக்கர் காணிகளும், மன்னார்
மாவட்டத்தில் 54 ஏக்கர் காணிகளும் சுவீகரிக்கப்பட இருந்தன.

அரசாங்கத்தின் இந்த சுவீகரிப்புக்கு பல காரணங்கள் இருந்தன. இதன் பிரதான
நோக்கம் கட்டமைப்பு சார் இன அழிப்புத்தான். கட்டமைப்பு சார் இன அழைப்பில்
மிகவும் முக்கியமானது நிலப்பறிப்புத் தான். எந்த ஒரு மாவட்டத்திலும் தனித்து
தமிழர்கள் இருக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது.

சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் நோக்கமும் உண்டு. எல்லைப்
புறங்களையொட்டித்தான் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள முடியும் என்பதால்
காணிகள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. ஏனைய பிரதேசங்களில் இராணுவக்
குடியேற்றங்களை உருவாக்கலாம். கரையோரப் பிரதேசங்களில் அரசாங்கம் கவனம்
செலுத்துவதற்கு காரணம் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காது விட்டால் அவர்கள்
எப்போதோ ஒரு நாள் மீண்டும் போராடத் தொடங்குவர். அதன் போது கடல் ஊடாக
ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கு கடற் பிரதேசங்களே அவர்களுக்கு உதவக்கூடியதாக
இருக்கும். இதனைத் தடுப்பதற்காகவே கரையோரப் பிரதேசங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இராணுவ முகாம்களை அமைப்பதற்கும் காணிகள் தேவையாக உள்ளன. தற்போது இராணுவம்
பறித்துள்ள காணிகளை விடுவிக்கும்படி கடும் அழுத்தம் தமிழ் மக்களினாலும்,
சர்வதேச தரப்பினாலும், விடுக்கப்படுகின்றது.

இந்தக் காணிகளை விடுவித்தால்
இராணுவத்திற்கு காணிகள் தேவையாக இருக்கும்.
தவிர வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்கும் நோக்கமும் அரசிற்கு
உண்டு. இந்த விவகாரம் தமிழ் அரசியல்வாதிகளின் கண்களில் பெரியளவில் படவில்லை
என்றே கூற வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக காணி பறித்தல் என்ற
விவகாரமும் ஆபத்தான ஒன்றுதான்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் அதிகாரம்
தமிழ் மக்களுக்கு இல்லாத நிலையில் இந்த முதலீட்டாளர்கள் அரசாங்கத்திற்கு
சேவகம் செய்பவர்களாகவே இருப்பர். குறைந்தது அரசதரப்பு, தமிழ்த் தரப்பு,
வெளிநாட்டு முதலீட்டாளர் தரப்பு ஆகிய மூவரும் இணைந்து கைச்சாத்திடப்படுகின்ற
ஒப்பந்த மூலம்
வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் நோக்கமும் அரசுக்கு இல்லை.

வர்த்தமானி அறிவித்தலின்படி காணி உரிமையாளர்கள் 3 மாதத்திற்குள் காணி உரிமையை
நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு நிரூபிப்பது இலகுவானதல்ல.
நீண்ட போர் காரணமாக மக்கள் இலட்சக்கணக்கில் அகதிகளாகியுள்ளனர். அவர்கள் மூன்று
மாதத்திற்கு இலங்கை வந்து காணி உரிமைகளை நிரூபிப்பது என்பது இலகுவானதல்ல.
அவர்களில் பலர் நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையிலும் உள்ளனர்.

பெற்றோர் இறந்த குடும்பங்களைப் பொறுத்தவரை பிள்ளைகளுக்கு காணிகள் பற்றி
எதுவும் தெரியாது. புதிய தலைமுறைக்கு மொழிப் பிரச்சினையும் உண்டு. தவிர காணி
உறுதிகள் பல போர் காரணமாகவும், சுனாமி காரணமாகவும் அழிந்து போயுள்ளன.
காணிப்பதிவு திணைக்களத்தினால் கூட இதன் பிரதிகளை வழங்க முடியாத நிலை உள்ளது.
யாழ்ப்பாணம் காணிப்பதிவு திணைக்களத்தில் பிரதிகளைக் கேட்டால் பல அழிந்து போய்
உள்ளன என்றே பதில் வருகின்றது.

தமிழ் அரசியல்

இவை தவிர பெற்றோர்கள் இடப்பெயர்வு காரணமாகவும், ஆதனங்களில் தங்களுக்கு பிடி
இருக்க வேண்டும் என்பதற்காகவும், தங்களின் பூர்வீக ஆதனங்கள் பலவற்றை
பிள்ளைகளுக்கு கைமாற்றாதுள்ளனர். இவ்வாறு கைமாற்றப்படாத ஆவணங்கள் விடயத்தில்
அனைத்து பிள்ளைகளும் கையொப்பமிட்டே ஆதனங்களைக் கைமாற்ற முடியும். பிள்ளைகள்
வெவ்வேறு நாடுகளில் சிதறி வாழும்போது அனைத்து பிள்ளைகளும் கையொப்பமிட்டு
ஆதனங்களை கைமாற்றுவது இலகுவான ஒன்றல்ல.

அதுவும் பிள்ளைகளுக்கிடையே
முரண்பாடுகள் இருக்குமானால் இது மேலும் இழுபறிக்கு உள்ளாகும்.
இத்தகைய காரணங்களினாலும் பல காணிகள் கைமாற்றப்படாதுள்ளன.
பிள்ளைகள் கைமாற்றுவதற்கான செலவினங்களை டொலரில் கணக்குப் பார்த்தும்
முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதுண்டு.
வெளிநாடுகளில் அற்றோனித்தத்துவம் தயார் செய்வதற்கு அதிக பணம் செலவிட
வேண்டியிருக்கும்.

தவிர இலங்கையைப் போல சட்டத்தரணிகளை அணுகுவதும் அங்கு இலகுவான ஒன்றல்ல.
ஆதனங்கள் மட்டுமல்ல சேமிப்புப் பணத்தைப் பற்றி கூட பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு
தெரிவிக்காத நிலை உண்டு.

அவர்கள் இறந்ததும் அப்பணம் பிள்ளைகளுக்குப் போகாமல்
அரசாங்கத்திற்கு செல்லும் நிலையும் உண்டு. இவ்வாறு இலட்சக்கணக்கான தமிழர்களின்
சேமிப்பு பணம் அரசாங்கத்திற்கு சென்றுள்ளது. கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர்
தெரியாமலே பணச்சேமிப்புகளை மேற்கொள்ளும் போது பிள்ளைகளுக்கு இவை தெரியும் என
கூற முடியாது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஏனைய சிங்கள
அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டது. ஏனைய அரசாங்கங்கள் புறரீதியான சிதைப்பிலேயே
அதிகளவில் ஈடுபட்டன.

அவற்றின் சிதைப்பு நடவடிக்கைகள் ஏறத்தாழ நேரடியானதாக
இருக்கும். அடையாளம் காண்பதும் இலகு. காணிகளைப் பறித்தல், மொழியைப்
புறக்கணித்தல், கலாச்சாரத்தை சிதைத்தல், பொருளாதாரத்தை அழித்தல் என தேசிய
இனத்தை தாங்கும் தூண்களை அழிப்பதில் அவை நேரடியாகவே ஈடுபடும். இதனை அடையாளம்
காண்பது இலகுவான ஒன்றாக இருப்பதால் தற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பதும் சுலபமாக
இருக்கும்.

அகச்சிதைப்பு அவ்வாறானதல்ல.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புறச் சிதைப்பையும், அகச்சிதைப்பையும்
சமாந்தரமாக மேற்கொள்கின்றது.

ஒரு பக்கத்தில் வர்த்தமானி மூலமும் குருந்தூர் மலை, உகந்தை முருகன் ஆலயம்
என்பவற்றில் நேரடியாகவும், ஆக்கிரமிப்புகளச் செய்யும் அதே வேளை இனவாதத்திற்கு
எதிர் சமத்துவத்திற்கு ஆதரவு எனக் கூறிக்கொண்டு அரசியல் ரீதியில் கட்சியாக
ஆக்கிரமிப்பு செய்வதன் மூலம் தமிழ் அரசியலை அகரீதியாகவும் சிதைக்கின்றது.

முன்னைய அரசாங்கத்தைப் பொறுத்தவரை சிங்களக் கட்சிகளின் தமிழ் முகவர்கள் தான்.
தமிழர் தாயகத்தில் கூடாரமடித்தார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில்
கட்சியே கூடாரமடிக்கின்றது. ஏனைய சிங்களக் கட்சிகளின் தமிழ் முகவர்கள்
ஒப்பீட்டு நிலையில் சற்று சுயாதீனமாக செயற்பட்டனர். தேசிய மக்கள் சக்தியின்
தமிழ் முகவர்களுக்கு எந்தச் சுயாதீனமும் கிடையாது. வெறும் கொத்தடிமைகளாகவே
உள்ளனர்.

 தமிழரசுக் கட்சி

தப்பித்தவறியும் கூட தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் பற்றி
அவர்களினால் பேச முடியாது. ஏனைய சிங்களக் கட்சிகளின் தமிழ் முகவர்கள் தங்களை
தமிழ்த் தேசியவாதிகளாகவும் காட்டிக்கொண்டதுண்டு. அங்கையன் இராமநாதன், விஜயகலா
மகேஸ்வரன் போன்றோர் இவ்வாறு காட்ட தயங்கியதில்லை. தேசிய மக்கள் சக்தியில் இது
பற்றி நினைத்தே பார்க்க முடியாது.

அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றமைக்கு பல காரணங்கள் இருந்தன.
அதில் முதலாவது தமிழ் தரப்பின் ஒருங்கிணைந்த எதிர்ப்புத் தான்.

தமிழக் கட்சிகள் சிவில் அமைப்புகள், கருத்துருவாக்கிகள், ஊடகங்கள்
என்பவற்றுக்கு இடையே ஒருங்கிணைந்த கூட்டுச் செயற்பாடுகள் இருந்தன. கட்சிகளில்
முதல் நிலையில் இதனை முதன்மைப்படுத்தியது தமிழரசுக் கட்சி தான்.

சுமந்திரன்
இது விடயத்தில் முன்னணியில் நின்றார். ஒரே நேரத்தில் சட்டரீதியான
அணுகுமுறையையும், அரசியல் ரீதியான அணுகுமுறையையும் முன்னெடுத்தார். யாழ்ப்பாண
மாவட்டத்தில் காணிச் சுவீகரிப்புக்கு அதிகளவில் முகம் கொடுக்கக்கூடிய பிரதேசம்
வடமராட்சி கிழக்குப் பிரதேசம் தான். போரியல் ரீதியாகவும் , இப்பிரதேசம்
கேத்திரமிக்கது.[

புலிகளுக்கு பல வழிகளிலும் உதவி புரிந்த பிரதேசம். சுமந்திரன்
இளம் சட்டத்தணிகளோடும் சட்ட மாணவர்களோடும் சட்ட ரீதியாக முகம் கொடுப்பது பற்றி
வடமராட்சி கிழக்கில் ஆலோசனைகளை நடத்தினார்.
மறுபக்கத்தில் மே 28ஆம் திகதிக்கு முன் வர்த்தமானி அறிவித்தலை மீளப்
பெறாவிடின் வடக்கு – கிழக்கு தழுவிய வகையில் போராட்டம் வெடிக்கும் என அறைகூவல்
விடுத்தார். மாவையும் முன்பு இவ்வாறு பல வெடிகளை கொழுத்தினார்.

அவையெல்லாம்
வெடிக்காத சீன வெடிகளாகவே இருந்தன. சுதந்திரனின் வெடியும் அவ்வாறான ஒன்றாகவே
இருந்தது. அதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. சிவில்
அமைப்புகளுடன் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். அவர் அழைத்தவுடன் சிவில்
சமூகங்கள் கலந்து கொள்ளும் என கூறுவதற்கும் இல்லை.

எழுச்சியான போராட்டம் ஒன்றை
நடாத்துவதாக இருந்தால் சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இணைந்த
முயற்சியினாலேயே அது சாத்தியப்படுத்தப்படும். “எழுக தமிழ், பொத்துவில் முதல்
பொலிகண்டி வரை” பேரெழுச்சி என்பன இவ்இணைவின் மூலமே சாத்தியமானது.

தமிழரசுக்
கட்சி மட்டும் போராட்டத்தை முன்னெடுத்தால் ஏனைய கட்சிகள் கலந்து கொள்ள மாட்டா.
பொது சிவில் அமைப்பு அனைவருக்கும் அழைப்பு விடுத்தாலே அதற்கான சாத்தியங்கள்
இருக்கும்.

எனவே சுமந்திரனின் போராட்ட வெடி பெரியளவில் நிகழக்கூடிய வாய்ப்புகள்
இருந்திருக்காது.

கட்சிகளுடனான உரையாடலில் இது பெரியளவிற்கு பேசப்படவில்லை.
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழத்; தேசியப் பேரவையின் முயற்சிகள் இது
விடயத்தில் மெச்சத்தக்கதாக இருந்தன. காணி விவகாரத்தை சர்வதேச மயப்படுத்துவதில்
தமிழ்த் தேசியப் பேரவை காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தது. வெளிநாட்டு
தூதுவர்களை கூட்டாக சந்தித்து. காணிப்பறிப்பை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு
தமிழ்த் தேசியப் பேரவையினர் வேண்டியிருந்தனர்.

தமிழ் ஊடகங்கள் 

இது அதிகளவில்
பங்காற்றியிருந்தது. வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறும் முயற்சிக்கு சர்வதேச
அழுத்தமும் பிரதான காரணமாகும்; இந்தக் கட்டுரையாளர் அடிக்கடி கூறுகின்ற
விடயமும் இதுதான.; இன்று சிங்கள அரசாங்கம் பயப்படுவது தமிழ் மக்களின் உலகளாவிய
அரசியல் போராட்டங்களுக்கு தான்.

காணிச்சுவீகரிப்பு விவகாரத்தைப் பொறுத்தவரை தாயகத்தில் மக்கள் ஒருங்கிணைந்து
போராடினால் தமிழகம், புலம்பெயர் நாடுகளிலும் வலிமையான போராட்டம் உருவாகும்.
இது வலிமையான உலக அபிப்பிராயத்தை கொண்டுவரப் பார்க்கும். இந்த அச்சம் சிங்கள
அரசாங்கங்களுக்கு தொடர்ச்சியாக உள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு இந்த அச்சம்
இரட்டிப்பாக உள்ளது எனலாம் ஏற்கனவே தமிழ் மக்கள் தங்களோடு நிற்கின்றனர் என்ற
விம்பத்தை உலகளவில் கட்டியெழுப்பிய தேசிய மக்கள் சக்தி உள்;ராட்சிச் சபைத்
தேர்தல் முடிவுகளுடன் ஆடிப்போயுள்ளது. வடக்கு – கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில்
ஒரு சபையில் கூட ஆட்சி அமைக்கும் நிலையில் அது இல்லை. தற்போது அது தற்காப்பு
நிலையை எடுக்க முயற்சிக்கின்றது.

போராட்டம் உருவாகுமானால் தற்காப்பு நிலையைக்
கூட பேண முடியாத நிலை அதற்கு ஏற்படும்.
ஊடகங்கள், கருத்துருவாக்கிகளின் பங்களிப்பும் குறைத்து மதிப்பிடக் கூடியது
ஒன்றல்ல.

தமிழ் ஊடகங்கள் செய்திகள் ஊடாகவும் ஆசிரியர் தலையங்கங்கள்; ஊடாகவும்
விழிப்புணர்வை ஏற்படுத்தின. கருத்துருவாக்கிகள் பல்வேறு ஆய்வு, விமர்சனக்
கட்டுரைகளினூடாக இதன் ஆபத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் தமிழ்ப் பிரிவைச் சேர்ந்தவர்களும் வர்த்தமானி
அறிவித்தலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன என்றே செய்திகள் வருகின்றன.
கட்சிகளின் உள்ளுராட்சிச் சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்றது. அதில் உறுப்பினர்கள் இதற்கான
எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

கட்சியின் உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்
ஒருவரே இதனை நேரடியாகவே கட்டுரையாளரிடம் தெரிவித்திருந்தார். எனவே இவ்வாறு
அனைத்து பக்கங்களிலிருந்தும் வந்த எதிர்ப்புகளே அரசாங்கத்தை கீழிறங்க வைத்தது
எனலாம்.

இப்பொழுது இடம் பெறும் கேள்வி இந்த விவகாரத்தில் அரசாங்கம் இனி என்ன செய்யும்?
என்பதே! இது சிறீலங்கா அரசின் தீர்மானமே ஒழிய தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல. எனவே இதனை இரகசியமாக செய்வதற்கே முயற்சிக்கும்.
நேரடியாக முடியாதவற்றை இரகசியமாக செய்வது என்பது சிறீலங்கா அரசாங்கத்தின்
வழமையே! திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்கள் தவிர ஏனைய சட்டவிரோத விவசாய
குடியேற்றங்கள், கைத்தொழில் குடியேற்றங்கள், மீனவர் குடியேற்றங்கள் ,
வியாபாரக் குடியேற்றங்கள் , புனித பிரதேசக் குடியேற்றங்கள் , எல்லாம்
இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்களே! எனவே அந்த வழிகளையே அரசு
மேற்கொள்ளும்.

அதற்கு ஏதாவது புதுப்புதுப் பெயர்கள் சூட்டப்படலாம். மகாவலி
குடியேற்றம் போல ஏதாவது வரலாம்

தமிழ் மக்கள் இது தொடர்பாக என்ன செய்யலாம்? இதற்கு ஒரேயொரு மருந்து
ஒருங்கிணைந்த அரசியலே! கட்சிகள் ஒருங்கிணைந்து அரசியலுக்கு வர மாட்டார்கள்
என்பதை அறிந்து தற்போது தமிழ் மக்கள் நிர்ப்பந்த ரீதியாக ஒருங்கிணைந்த
அரசியலுக்கு தள்ளியிருக்கின்றார்கள்.

இணைந்து உள்ளூராட்சி நிர்வாகத்தை நடாத்த
வேண்டிய நிலையும், தமிழர் தாயகத்தில் சிங்கள கட்சியான தேசிய மக்கள் சக்தியின்
ஆதிக்கமும் இந்த நிர்ப்பந்த அரசியலுக்குள் தமிழ்த் தேசிய கட்சிகளை
தள்ளியுள்ளது.
இது எதிர்காலத்தில் வளரும் என நம்புவோம்.
எதிர்காலம் என்பதே நம்பிக்கை தானே!

NO COMMENTS

Exit mobile version