Home இலங்கை அரசியல் அநுர அரசை கடுமையாக சாடும் சாணக்கியன் எம்.பி

அநுர அரசை கடுமையாக சாடும் சாணக்கியன் எம்.பி

0

கடந்த கால அரசுகள் கட்சி சார்ந்த அரசியலை முன்னெடுத்ததுபோன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவது ஆரோக்கியமான விடயம் அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த சீ.மு.இராசமாணிக்கத்தின் பிறந்த தின நிகழ்வின் பின்னர் நேற்று(20.01.2025)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது, “புதிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் செயற்பாட்டினை இன்னும் ஆரம்பிக்கவில்லை.

புதிய அரசியலமைப்பு

2015ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டுவரையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் வரைவில் தாங்கள் இணங்கிய விடயங்களைக் கொண்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தாலும் கூட தற்போது அவர்கள் என்ன மனநிலையிலிருக்கின்றார்கள் என்பது தெரியாத நிலையே இருக்கின்றது.

அந்தவகையில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவில் அரசாங்கத்திற்கு புதிய அரசியலமைப்பினை விரைவுபடுத்துவதற்கு பாரிய அழுத்தங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அரசியலமைப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பதில் இலங்கை தமிழரசுக்கட்சி 75 வருடமாக பல முன்னெடுப்புகளை முன்னெடுத்துவந்துள்ளது. அந்த வகையில் பல வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் இருக்கின்றன.

இவை அனைத்தையும் ஆராய்ந்து அரசாங்கத்துடனும் இவ்விடயங்களை முன்னெடுப்பதற்காக ஏழுபேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. 

ஏழுபேர் கொண்ட குழு புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதங்களை முன்னெடுப்பதற்காக தீர்மானம் எடுத்திருந்தது.

அரச ஊழியர்கள்

அதேபோல் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் நடைபெறாமலிருக்கின்றது. இதனால் அரச ஊழியர்களாக இருந்த பலர் பல கஷ்டங்களுக்கு முகங்கொடுத்தார்கள். சம்பளம் அற்ற விடுமுறையில் பலமாதங்கள் இருந்தனர்.

தாங்கள் வேலை செய்த பிரதேச செயலகமோ அல்லது கல்வி வலயமோ அல்லது மாவட்டத்தையோ தாண்டி வெளி மாவட்டத்தில், வெளி பிரதேச செயலகங்களில் வெளி வலயங்களில் வேலை செய்ய வேண்டிய கஷ்டங்களுக்கு முகங்கொடுத்தார்கள்.

கிராமசேவையாளர்களுக்கான புதிய நியமனங்கள் வழங்கியபொழுது ஒரு கட்சியிலே வேட்பாளராக இருந்த காரணத்தினால் அவர்களுக்கு அந்த புதிய நியமனங்கள் கிடைக்கவில்லை. 

சிலர் தங்களுடைய நிதியை செலவிட்டு கட்சிக்காக பரப்புரையில் ஈடுபட்டார்கள். இவ்வாறானவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது.

கட்சி சார்ந்த அரசியல்

கட்சியின் தீர்மானங்களை மீறி வேறு கட்சிக்கு ஆதரவு வழங்கியவர்கள், வேறு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர்கள், உயிரிழந்தவர்கள், வெளிநாடு சென்றவர்கள் மற்றும் விருப்பமில்லாதவர்களை மாற்றி அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பது தொடர்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த கால அரசுகள் கட்சி சார்ந்த அரசியலை முன்னெடுத்ததுபோன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது.

இது ஆரோக்கியமான விடயம் அல்ல.அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த நாட்டினை கட்டியெழுப்பவேண்டும் என ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரச்சினைகளுக்கு நீதிவேண்டும் என்று பேசும் அதிகாரிகளை பழிவாங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version