Home இலங்கை அரசியல் தமிழ்த் தலைவர்கள் மீதான ஏமாற்றமே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு காரணம்

தமிழ்த் தலைவர்கள் மீதான ஏமாற்றமே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு காரணம்

0

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழ்த் தலைவர்கள் மீதான ஏமாற்றமே வடக்கு, கிழக்கில் எமது வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மீதும், தேசிய மக்கள் சக்தியின் மீதும் தமிழ் மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை குலைக்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி, வடக்கு, கிழக்கில் பெற்றுள்ள தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிரிகளாக சித்தரித்தனர் 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலின்போது, ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) அவரை ஆதரித்த பரிவாரங்களும் எம்மை தமிழ் மக்களின் எதிரிகளாக சித்தரித்து பிரசாரங்களை செய்தார்கள்.

சொற்ப காலமே ஆட்சியில் இருப்பார்கள். வன்முறைகள் தோற்றம் பெறும் என்றும் கூறினார்கள். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் எம்மீது சந்தேகங்கள் இருந்தன. இதனால் 25ஆயிரத்துக்கு உட்பட்ட வாக்குகளையே அளித்தார்கள்.

ஆனால் ஜனாதிபதி தேர்தலின் பின்னரான 45 நாட்களில் ஜனாதிபதி அநுர குமாரவின் ஆட்சியை மக்கள் நேரடியாகவே பார்த்தார்கள். எந்தவிதமான வன்முறைகளும் இடம்பெறவில்லை. சுமுகமான நிலையில் நாடு செயற்பட்டது.

இதனால் தமிழ் மக்களுக்கு எம்மீதான நம்பிக்கை ஏற்பட்டது அதுமட்டுமன்றி, எழுபது ஆண்டுகளாக பிரபுத்துவ தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள்.

தமிழ் மக்களின் நம்பிக்கை

ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை. தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

தமிழ் மக்கள் அன்றாடம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.

போதைப்பொருள் பாவனைக்கு இளையோர் அடிமையாதல் உள்ளிட்ட பல நெருக்கடிகள் உள்ளன.

அந்தப் பிரச்சினைகள் கூட சரியாகக் கையாளப்படவில்லை. இதனால் அவர்கள் அரசியல் பிரச்சினைகளுக்கு முன்னதாக தமது அன்றாடப் பிரச்சினைகளை களைவதற்காக மாற்றத்தை எதிர்பார்த்தார்கள்.

அந்த மாற்றத்துக்காவே எமக்கு வாக்களித்துள்ளார்கள்.

நாம் நிச்சயமாக அவர்கள் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்.

ஜனாதிபதி அநுரகுமாரவும் தேசிய மக்கள் சக்தியும் தமிழ் மக்களின் நம்பிக்கையை குலைக்காது பாதுகாக்கும்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version