இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவு அறிக்கைகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஓகஸ்ட் 2024 இல் 5,954 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
ஜூலை 2024 இல் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்து மதிப்பு 5,652 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இது 5.3% குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
இதற்கிடையில், உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு, ஓகஸ்ட் மாதத்தில் 6.0% ஆன வளர்ச்சியை 5,577 மில்லியன் டொலர்களிலிருந்து 5,912 மில்லியன் டொலர்களாக எட்டியுள்ளது.
சுங்க வருமானம்
இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீன மக்கள் வங்கியின் அந்நியச் செலாவணி வசதியிலிருந்து பெறப்பட்ட பற்றுச்சீட்டுக்களும் அடங்கும், இது சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும் என்பதுடன், அவை நிபந்தனைகளுக்கு உட்பட்டு உபயோகிக்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை சுங்கத் திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபா சுங்க வருமானம் கிடைத்துள்ளதாகவும், அதன் மூலம் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட 1.5 டிரில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை அடைந்துகொள்ள முடியும் என்றும் சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார்.