Home இலங்கை கல்வி சாதாரண தர மற்றும் உயர் தர பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து வெளியான தகவல்

சாதாரண தர மற்றும் உயர் தர பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து வெளியான தகவல்

0

புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தின் கீழ் பரீட்சை முறை மற்றும் சாதாரண தர மற்றும் உயர் தர பாடத்திட்டங்கள் மாற்றப்படாது என்று தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள விதானபத்திரன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சீர்திருத்தங்கள் கல்வி முறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வராது என்று கூறிய அவர் பரீட்சை முறை மற்றும் பாடங்களைப் புதுப்பிக்க கணிசமான அளவு நேரம் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடி 

அத்தோடு, புதிய உலகிற்கு ஏற்றவாறு மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சீர்திருத்தங்கள் ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டால், ஒரு பெரிய நெருக்கடி உருவாகும் எனவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பரீட்சைகள் மற்றும் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டால், மாணவர்கள் தயாராவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாடத்திட்ட புதுப்பிக்கும் முறை

அதன்படி, பாடத்திட்டம் படிப்படியாக புதுப்பிக்கப்பட்டு தரம் 1 முதல் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், தற்போது 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கல்வி அமைச்சகத்துடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எட்டு வருடங்களுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தைப் புதுப்பிக்கும் முறை வழக்கம் போல் தொடரும் என்றும் பணிப்பாளர் நாயகம் விதானபத்திரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version