Home இலங்கை சமூகம் ஒட்டுசுட்டான் பாடசாலை விவகாரம்: வடமாகாண நன்னடத்தை பிரிவால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை

ஒட்டுசுட்டான் பாடசாலை விவகாரம்: வடமாகாண நன்னடத்தை பிரிவால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை

0

Courtesy: uky(ஊகி)

ஒட்டுசுட்டான் பாடசாலை விவகாரம் தொடர்பில் வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர் இராஜேந்திரம் குருபரன் தலைமையிலான விசாரணைக்குழு தனது விசாரணைகளை நேற்று (26.06.2024) ஆரம்பித்துள்ளது.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரின் மோசடி தொடர்பாக வடமாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டு இருந்த மூவர் அடங்கிய விசாரணைக் குழுவாக இது உள்ளது.

குறித்த பாடசாலையில் நடைபெற்றதாக முன்வைக்கப்படும் மோசடிகளின் உண்மைத் தன்மையினை அறியும் பொருட்டு இந்த  விசாரணைக் குழு தன் பணிகளை முன்னெடுத்திருப்பதாக ஒட்டுசுட்டான் பாடசாலைச் சமூகம் சார்ந்து பேசியவர் குறிப்பிட்டார்.

வடமாகாண பிரதம செயலாளரின் பணிப்பிற்கமைய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான விசாரணைக் குழுவும் இது போல் ஒரு விசாரணையினை ஆரம்பித்திருந்தது நோக்கத்தக்கது.

வலயக்கல்விப் பணிமனை 

வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு ஆணையாளர் குருபரன் தலைமையிலான விசாரணைக் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணை துணுக்காய் வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்றிருந்தது.

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆகியோர் தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

வாக்குமூலங்களினை பதிவு செய்து கொண்ட விசாரணைக் குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் திருப்தி அடைந்துள்ளதோடு இந்த விசாரணை நல்ல பலனைத் தரக்கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

துணுக்காய் வலயக் கல்விப் பணிமனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஆரம்ப புலன் விசாரணைகளின் போது விசாரணைக் குழுவினரின் செயற்பாடு மற்றும் விசாரணைக்கான ஏற்பாடுகள் நம்பகத் தன்மையினை ஏற்படுதுவதாக வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்தவர்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பாடசாலையின் நலன் சார்ந்தோருடன் உரையாடும் போது தெரிவித்திருந்தனர் என்பது நோக்கத்தக்கது.

இந்த ஆரம்ப புலன் விசாரணை ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தின் அதிபர் மீதான குற்றச்சாட்டுக்கள் தெடர்பிலான சர்சையினை தீர்வு நோக்கி கொண்டு சென்று விடும் என்பது அவர்களின் எண்ண ஓட்டமாக இருப்பதனை அவர்களது உரையாடல்களின் மூலம் அறிய முடிகிறது.

எழுப்பப்படும் கேள்வி

வடமாகாண கல்விச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி செல்லும் பொருட்டு இருந்து வரும் வடமாகாண கல்வித் திணைக்களம் ஏன் இது தொடர்பில் ஆரோக்கியமான செயற்பாடுகளை செயற்படுத்த தவறியிருந்தது என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே தோன்றுவதனை தடுக்க முடியாது.

முறைப்பாட்டாளர்களான பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர்களின் முறைப்பாடுகள் தொடர்பில் ஆரம்பத்திலேயே கருத்தில் எடுத்து விசாரணைகளுக்கு கூடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பின் கல்விப் புலம் சாராத இன்றைய விசாரணைகள் தேவைப்பட்டிருக்காது என சமூக விடய ஆய்வாளர் வரதன் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.

வடமாகாண பிரதம செயலாளரின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான விசாரணைக் குழு மற்றும் வடமாகாண ஆளுநரின் பணிப்பிற்கமைய வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு ஆணையாளர் தலைமையிலான விசாரணைக் குழு என இரு குழுக்கள் தங்கள் ஆரம்ப புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன என ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய நலன் சார்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டுவது நோக்கத்தக்கது.

கல்விப் புலம் சாராத இந்த விசாரணை குழுக்களின் விசாரணைக்கு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் எல்லாம் தகவலறியும் சட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட தகவல்களை அடிப்படையாக கொண்டவை.

பொறுப்பாக பதிலளிக்குமா 

இத்தகைய ஒரு சூழலில் குற்றச்சாட்டுக்களை உறுதிசெய்து கொள்வது இலகுவானதாகவே இருக்கும்.அவ்வாறு முறைப்பாட்டாளர்களின் கூற்றுக்கள் உண்மையானவையாக உறுதிசெய்யப்பட்டால் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டிய தேவை வடமாகாண கல்வித் திணைக்களத்திற்கு இருந்திருக்கும் என்பது நோக்கத்தக்கது.

அவ்வாறான ஒரு சூழலில் வட மாகாண கல்வித் திணைக்களத்திடம் ஏன் உரிய விசாரணைகளுக்கு கூடாக நடவடிக்கைகளை இதுவரை காலமும் நீங்கள் எடுக்கத் தவறியிருந்தீர்கள் என்ற கேள்வியினை இந்த விசாரணைக் குழுக்கள் கேட்குமா என்பது இருந்துதான் பார்க்க வேண்டும்.

அவ்வாறான கேள்விக்கு வடமாகாண கல்வித் திணைக்களம் பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டினை வடமாகாண கல்வித் திணைக்களம் சாராத இந்த புலன் விசாரணைகள் ஏற்படுத்தியிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ஒரு வேளை வடமாகாண கல்வித்திணைக்களம் உரிய முறையிலான விசாரணைகளை முன்னெடுத்து சூழ்நிலைகளுக்கு பொருத்தப்பாடன தீர்வுகளை வழங்கியிருந்தும் அந்த தீர்வுகளில் முறைப்பாட்டாளர்களுக்கு திருப்தி இல்லாத ஒரு சூழலில் இந்த விசாரணைக் குழுக்கள் உருவாக்கப்பட ஏதுக்களை அவர்கள் உருவாக்கியிருந்தால் வடமாகாண கல்வித் திணைக்களம் இந்த விசாரணைக் குழுக்களுடன் இணைந்து முறைப்பாட்டாளர்களுக்கான திருப்தியினை ஏற்படுத்தும் பொருட்டு தன் செயற்பாடுகளை நகர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள் அது தள்ளப்படுவதனையும் சுட்டிக்காட்டலாம்.

குற்றச்சாட்டு

இதற்கிடையில் துணுக்காய் வலயக் கல்வித் திணைக்களம் ஆரம்ப புலன் விசாரணை ஒற்றைச் செய்து அதன் முழுமைப்படுத்தப்பட்ட அறிக்கையினை வடமாகாண கல்வித் திணைக்களத்திற்கு வழங்கியிருந்தது என்பது நோக்கத்தக்கது.

அந்த அறிக்கை தொடர்பில் வடமாகாண கல்வித் திணைக்களம் எந்தவொரு நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகின்றது.

சமூக நலன் சார்ந்த தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தோடு முன்னெடுக்கப்படும் விசாரணைகள் பல்பக்க ஆய்வுகளை செய்வதோடு ஒவ்வொரு செயற்பாட்டுக்குமான புறக்காரணிகளையும் ஆராய வேண்டும்.

அத்தகைய முயற்சி இது போல் மற்றொரு சிக்கல் தோன்றுவதை தடுப்பதற்கான கற்றல்களையும் தந்துவிடும் என சமூக விடய ஆய்வாளர் இது தொடர்பில் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version