Home இலங்கை சமூகம் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : 29,000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : 29,000 பேர் பாதிப்பு

0

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre) தெரிவித்துள்ளது.

அந்த மாவட்டங்களில் 7,395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

நீர்மட்டம் உயர்ந்துள்ளது

மேலும், இதுவரை கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சி காரணமாக, நில்வளா கங்கை, கிங் கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டங்கள் உயர் மட்டத்தில் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் (24) மழையுடன் மினி சூறாவளி வீசியதால் 68 வீடுகளின் கூரைகள் தூக்கி எறியப்பட்டு சேதமடைந்த நிலையில் வீடுகளில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

அத்துடன் வீதிகள் மற்றும் வீடுகளில் இருந்த பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் மின்சார கம்பிகள் அறுந்ததையடுத்து சில மணி நேரம் மின்சாரம்  துண்டிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடை ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சி.எம். சியாட் தெரிவித்துள்ளார்.

இந்த மினி சூறாவளியினால் ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, மண்முனை வடக்கு  பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதூர் சேத்துக்குடா உட்பட பல பிரதேசங்களில் வீடுகள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள் க.சரவணன் 



https://www.youtube.com/embed/TWvVEVgWhDw

NO COMMENTS

Exit mobile version