Home இலங்கை சமூகம் மன்னார் பாடசாலை ஒன்றில் அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்

மன்னார் பாடசாலை ஒன்றில் அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்

0

மன்னார் – வங்காலை புனித ஆனாள் கல்லூரி தேசியப் பாடசாலையின் அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (26.08.2024) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘பிள்ளைகளின் கல்வியை பாளாக்காதே, ஒழுக்கம் இல்லாத உன்னால் எப்படி ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்க முடியும்?, ஒரு குடும்பத்திற்காக ஊரை அழிப்பதா?’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கல்வி நடவடிக்கைகள் 

மன்னார் – வங்காலை புனித ஆனாள் கல்லூரி தேசியப் பாடசாலை கடந்த பல வருடங்களாக
கல்வியிலும், விளையாட்டு நிகழ்வுகளிலும், ஏனைய போட்டிகளிலும் சாதனை நிலை நாட்டி
வந்த நிலையில் அண்மைக் காலங்களாக பாடசாலை சகல துறைகளிலும் கீழ் மட்டத்தை
அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அந்த பாடசாலையின் கல்வி நடவடிக்கை
பாதிக்கப்பட்டுள்ளதோடு, மாணவர்களின் சகல துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் நிர்வாகத் திறன் அற்றவராக உள்ள நிலையில்
உடனடியாக அவரை மாற்றி புதிய அதிபரை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

உரிய நடவடிக்கை 

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை குறிப்பிட்ட அதிபரை இடமாற்றம் செய்ய  எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதன் காரணமாகவே, பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து குறித்த போராட்டத்தை
முன்னெடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதேவேளை, போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த மன்னார் வலயக்கல்வி
பணிமனை அதிகாரிகள் உடனடியாக இந்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை
மேற்கொள்வதாக தெரிவித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version