Courtesy: uky(ஊகி)
வவுனியா – நெடுங்கேணியில் கிறிஸ்த்தவ காலத்துக்கு முந்தைய கால ஆதித்தமிழர் வாழ்ந்ததற்கான சான்றாதாரம் கிடைக்க பெற்றுள்ளது.
சிந்துவெளி காலத்திலும் கீழடி ஆய்வுகளிலும் கிடைக்கப்பெற்ற சான்றுகளுடன் இவை ஒத்துப்போவதாக வரலாற்றுத்துறை ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர் நெடுங்கேணி சானுஜன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வு தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள வரலாற்றுப் பேராசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டதோடு ஊசாத்துனைகளையும் அவர் பயன்படுத்தியிருக்கின்றார்.
நெடுங்கேணி சானுஜன் BA (Hons) in History (SPL), MA R துறைசார் கற்றலில் ஈடுபட்டதோடு ஈழத்திலும் உலகப் பரப்பிலும் ஈழத்தமிழர்கள் தொடர்பிலான தொல்பொருட்கள் மற்றும் அவர்களது பரம்பல் தொடர்பில் தொடர்ந்து கூர்மையான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்துகொண்டிருக்கின்றார்.
நெடுங்கேணியில் கிடைந்த ஆதித்தமிழரின் தொல்பொருள் தொடர்பில் அவர் பின்வருமாறு தன் கட்டுரையை விவரிக்கின்றார்.
குறியீடுகளுடன் சூதுபவளம்
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணியில் அண்மைக்காலத்தில் (24.02.2024) சிந்துவெளி குறியீடுகளுடன் கூடிய carnelian (சூதுபவள) கல் ஒன்று கிடைக்கப்பெற்றது.
5 கிராம் நிறையுடைய இக்கல் கிறிஸ்த்தவ சகாப்தத்திற்கு முற்பட்ட காலத்தில் அணிகலன்களுக்கு பயன்படுத்தப்பட்ட துளையிடப்படாத கல் ஆகும்.
இந்த சூதுபவள கல் கிடைக்கப்பெற்ற பின்னர் இதுபோன்ற வராகம் (பன்றி) உருவம் பொறிக்கப்பட்ட சூதுபவளம் கல்லொன்றும் தமிழகத்தில் கீழடி 10 ஆம் கட்ட அகழாய்வில் கிடைக்கப்பெற்றது, அதனையடுத்து தமிழகம் வெம்பக்கோட்டை அகழாய்வில் திமில் உள்ள காளையின் உருவம் பொறிக்கப்பட்ட சூதுபவளம் கல் ஒன்றும் கிடைக்கப்பெற்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
சூதுபவளம் (Carnelian) என்றால் என்ன
உரோம் உட்பட மேற்கு நாடுகளிலும் தமிழகத்தின் கீழடி மற்றும் அரிக்கமேடு, அகழ்வாய்வுகளிலும் இத்தகைய இளஞ்சிவப்பு நிற கார்னிலியன் (Carnelian Intaglio) கூட்டுக் குறியீடு முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
“கார்னிலியன்” என்பது ஒருவகை மதிப்பு மிக்க கல் வகையாகும். தமிழகத்தில் இவ்வகைக் கற்கள், மணிகள், மோதிரங்கள் போன்ற அணிகலன்கள் செய்ய இரும்புக்காலத்திலும் சங்ககாலத்திலும் பயன்படுத்தப்பட்டன.
இது கடும் சிவப்பு நிறமுடைய கல் வகையாகும். பண்டைய உரோமானிய பேரரசைப் பொறுத்தவரை, அவர்கள் மோதிரங்கள் போன்ற விலைமதிப்பற்ற ஆபரணங்களில் அதை பதிக்க கார்னிலியனைப் பயன்படுத்தினார்கள், இவற்றுள் தமது பொருள் அடையாளம் அல்லது தனிப்பட்ட கையொப்பம் ஆகியன இருந்தன.
கீழடி
தமிழகத்தின் கீழடி மற்றும் அரிக்கமேடு போன்ற அகழ்வாய்வு மையங்களிலும், ஏனைய பெருங்கற்கால மையங்களிலும் இத்தகைய 14000இற்கும் மேற்பட்ட குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் கா.இராஜன் குறிப்பிடுகிறார்.
அண்மைக்காலத்தில் ‘பொருந்தல்’ என்ற இடத்தில், பேராசிரியர் கா.இராஜனின் தலைமையில் ஓர் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்ஆய்வில் 7500 மேற்பட்ட மணிகள் கண்டெடுக்கப்பட்டன.
பொதுவாக இத்தகைய தொல்பொருட்கள் கிறிஸ்த்தவ சகாப்தத்திற்கு முற்பட்ட கி.மு 04 ஆம் நூற்றாண்டிற்கும் மேற்பட்ட காலப்பகுதியை சேர்ந்தவையாகும்.
கார்னீலியன் கல்
கார்னீலியன் என்பது ஒருவகை மதிப்பு மிக்க கல் வகையாகும். தமிழகத்தில் இவ்வகைக் கற்கள், மணிகள், மோதிரங்கள் போன்ற அணிகலன்கள் செய்ய இரும்புக்காலத்திலும், சங்ககாலத்திலும் பயன்படுத்தப்பட்டன.
இவ்வகை மணிகள் ஆயிரக்கணக்கில் பெருங்கற்கால மற்றும் சங்ககால வாழ்விடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் இவை போன்று கார்னீலியன் மணிகள் பெருமளவில் காணப்படுகின்றன.
கொடுமணல், தண்டிக்குடி, பொருந்தல் மற்றும் பிற இடங்களில் இவை போன்ற மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுத் தொடக்கக்கால வாழ்விடங்களில் இவை போன்ற கற்கள் மோதிரங்கள் மற்றும் கழுத்தணிகலன்கள் போன்றவற்றை செய்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுளதென தமிழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறை முனைவர் வீ.செல்வகுமார் குறிப்பிடுகிறார்.
இத்தகைய ETCHED CORNELIAN BEADS” என வழங்கப்படும் கற்களை தமிழில் ‘சூது பவளம்’ என்கிறார்கள்.
இவ்வகையான கற்கள் தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. இவை குசராத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக இருக்கலாம் என்ற கருத்தும் ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளது. இவை கேரளத்தின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இந்தக் கற்களை கொங்கு நாட்டில், நுண்ணிய தொழில்நுட்பத்துடன் மணிகளாகச் செதுக்கி இருக்கிறார்கள்.
சிவகங்கை: கீழடி 9 ஆம் கட்ட அகழாய்வில் உயர்வகை சிவப்பு பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒரே நிறத்தில் மட்டுமே கண்டறியப்பட்ட சூதுபவளங்கள் தற்போது அலை அலையாக வரி வடிவத்துடன் வேலைப்பாடுகளுடனும் கிடைத்துள்ளன. இவ்வகை சூதுபவள மணிகள் முற்காலங்களில் மாலை போன்ற ஆபரணங்களாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மன்னார் கட்டுக்கரை
இலங்கை மன்னார் கட்டுக்கரையில் இவைபோன்ற விலையுயர்ந்த கற்கள், கல்மணிகள் என்பன கண்டறியப்பட்டன.
இவை தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவ் ஆதாரங்கள் பெருங்கற்காலப் பண்பாடு நிலவிய காலத்திலேயே இலங்கையின் புகழ்பெற்ற மன்னார் கட்டுக்கரைக்கும் தமிழகத்திற்கும் இடையேயான நெருக்கமான வர்த்தக, கலாசாரத் தொடர்புகள் கொண்டிருந்ததை உறுதி செய்கின்றன.
சூதுபவளம் பற்றிய ஐதீகங்கள்
சூதுபவளம் என்பதன் ஆங்கில சொல்லான கார்னீலியன் என்ற சொல் இலத்தீன் வார்த்தையான கார்னம் என்பதிலிருந்து உருவானது.
சூதுபவளக்கல் பற்றிய ஆதி காலத்திலிருந்து பல்வேறு நம்பிக்கைகள் காரணமாக பெருமளவில் மதிக்கப்படுகிறது.
இது ஆதி காலங்களிலிருந்து, சமூகத்தின் மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய விலைமதிப்பற்ற கல் என்று பெருமையாகக் கருதப்பட்டது. இவை போன்ற சால்செடோனி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகைக் கல்லான இவை எகிப்தியர்கள் மற்றும் திபெத்தியர்களுக்கு புனிதமான பொருளாகக் கருதப்பட்டிருந்தது.
சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தினர் இறந்த பிறகு, அவர்களை நல்லடக்கம் செய்யும்போது விலை மதிப்பற்ற இச் சூதுபவள இரத்தினங்களையும் அவர்களுடன் சேர்த்தே நல்லடக்கம் செய்தனர்.
மேலும் இவை பற்றிய நம்பிக்கைகளில் ஒன்றாக சூதுபவளம் மூளையின் வலது மற்றும் இடது பகுதிகளை ஒன்றிணைப்பதற்கும் அதன் மூலம் மன ஒருமைப்பாட்டுக்கு பங்களிப்பதுடன் இவை படைப்பாற்றல் ஆகியவற்றுக்கும் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரவும் பெரும் பங்காற்றும் என்றும் நம்பப்படுகிறது.
சூதுபவளம் அமானுஷ்ய சக்திகளைக் கைப்பற்றுகிறது என்று எகிப்தியர்களுக்கு ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. ஆகையால், அவர்கள் அதை தாயத்துக்களாக அணிந்துகொண்டார்கள். இதனால் மரணத்திற்குப் பிறகு ஆன்மா கடைசி வாழ்க்கையை எளிதில் கடந்து புதிய வாழ்க்கைக்குச் செல்கிறது என்ற நம்பிக்கை காரணமாக பல எகிப்திய கல்லறைகளில் சூதுபவளக் கற்கள் பொறிக்கப்பட்டன என்பர்.
ஐரோப்பியர்கள் இதை அணிவதால் நல்ல எதிர்காலம், தன்னம்பிக்கை, பொருள் வசதிகள் கூடும் என்று உறுதியாக இருந்தனர்.
கிரேக்கர்களும் உரோமானியர்களும் பாவத்திற்கு எதிரான கேடயத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் அதை மோதிரங்களில் பதிந்து அணிந்தனர். மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது என்று நம்பும் இந்தியர்களும், திபெத்தியர்களும் சூதுபவள மணிகள் தொடர்பான அதீத சக்திகளைக் கொண்டுள்ளதாகவும் நம்பினர்.
சூதுபவள மணிகள் அணிபவர்கள் நோய் தாக்கத்தின் போது அதனைத் தடுக்கும் ஆற்றலும், வலிமையும் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. அதாவது பசியை மேம்படுத்தி சக்தியை மீட்டுக் கொடுக்கிறது என்பதால் இந்தக் கல்லை விரலில் அணிய பரிந்துரைக்கப்படுகிறது.
சூதுபவள இரத்தினத்தின் இந்த பண்பு அதன் உரிமையாளருக்கு ஒரு ஆற்றல் ஊக்கியாக அமைகிறது. இவை எதிர்மறை எண்ணங்களையும் அதிர்வுகளையும் தடுக்கும் சக்தியை கொண்டது என்றும் கூறப்படுகிறது.
இது இரத்த சுத்திகரிப்புக்கும் உதவுகிறது என்று கூறப்படுவதுடன் சோதிடர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவும், அதிக பொறுமையை வளர்த்துக் கொள்ளவும் இவை போன்ற இரத்தினத்தை அணியுமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். அத்தோடு அதன் உரிமையாளரை அழகு, ஆரோக்கியம், செல்வத்திற்கும் உரிமையாளராக, வறுமை என்பதே இல்லாமல் பாதுகாக்கிறது என்றும் நம்பப்படுகிறது.
பண்டைய காலங்களில் உன்னதமான குடும்பங்கள் இந்த பன்முகக் கல்லை தங்கள் சமூகத்திற்கு மட்டுமே உடமையானதாக இருக்கவேண்டும் என்றும் பாடுபட்டனர்.
சிந்துவெளித் தொடர்பு
சூதுபவளத்தில் சிந்து நாகரிக குறியீடுகள்
இனி நெடுங்கேணியில் கிடைக்கப்பெற்ற இந்த சூதுபவளத்தில் உள்ள கூட்டு குறியீடுகள் தொடர்பாக பார்க்கும்போது இவை சிந்துவெளி குறியீடுகள் ஆகும். சிந்து வெளி குறியீடுகள், பிராமி எழுத்துடன் கலந்து எழுதும் முறை கி.மு 8-7 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரும் காணப்பட்டது.
ஆனால் இவ்வெழுத்துக்கள் தனி சிந்து வெளி குறியீடுகளாக அமைந்திருப்பதால் இவை சிந்துவெளி நாகரீக அழிவுக்கு முன்பதான கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருத முடிகின்றது.
இந்த குறியீடுகளை எனது முயற்சியினால் சிந்து வெளி ஆய்வாளர் பூரணசந்திர ஜீவா, சிந்துவெளி ஆய்வாளர் முனைவர் இரா.மதிவாணன், தொல்லியலாளர் க.த.திருநாவுக்கரசு போன்றவர்களின் சிந்துவெளி தொடர்பான வழிகாட்டும் நூல்களை அடிப்படையாகக் கொண்டு அதில் உள்ள குறியீகளுக்கான அர்த்தத்தினை படிக்க முடிந்தது.
அவற்றுள் சிந்துவெளி எழுத்து ஆய்வாளர் பூரணசந்திர ஜீவாவின் நூல்களில் உள்ள சிந்துவெளி எழுத்துக்களை அடிப்படையாகக்கொண்டு ஒப்பு நோக்கும்போது, இதில் மேற் பகுதியில் இருக்கும் இரு கோடுகளும் “இரு” என்ற பொருளைத் தருகின்றன.
அடுத்து வரும் இரு கயல்கள் போன்ற வடிவம் “ய்ய” என்ற பொருளை தருகின்றது. அதன் கீழேயுள்ள ஐந்து முனைகள் கொண்ட வடிவம் “ணா” என்ற பொருளைத் தருகின்றது. முற்காலத்தில் உயிர் மெய் எழுத்துக்களுக்கு புள்ளி வைப்பதில்லை. எனவே “ணா” எழுத்தை “ண்” என எடுத்துக் கொள்ள முடியும். ஆகவே “இரு+ய்ய+ணா= இருய்யணா” என்பது “இருளன்” என்பதன் பொருள் என்றே கருத முடிகிறது.
இருளன் என்பது சிந்துவெளிக்காலத்தில் வழிபடப்பட்ட முக்கியமான இறைவன் பெயர்களில் ஒன்றாகும். மொகஞ்சதாரோவில் கிடைக்கப்பெற்ற 1623, 2847 இலக்கம் இடப்பட்ட முத்திரைகளில் இருளனை “இருஅய்” என குறிப்பிடப்பட்டுள்ளது என்று பூரணசந்திர ஜீவா அவர்கள் விளக்கமளித்துள்ளார். (முத்திரை எண்கள் ஐராவதம் மகாதேவன் அடிப்படையில் அமைந்தவை) தொல்காப்பியர் தனது சொற்பிறப்பியல் பற்றிய விளக்கத்தில் உயிர் எழுத்துக்களான அகர, இகர சேர்க்கை ஐ காரமாகும் என குறிப்பிட்டுள்ளார். எனவே இரு என்ற சொல்லுக்குப் பின்பாக ள்+அ= ள, ய்ய என்பதில் ஐ காரமும் மறைந்துள்ளது எனக் கொள்ளுமிடத்து. இந்த எழுத்துக்கள் இருளன் என்ற கடவுளின் பெயரையே குறிக்கின்றது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
சிந்துவெளி முத்திரைகளில் இருளன்
சிந்துவெளியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் கிடைக்கப்பெற்ற பல முத்திரைகளில் சிந்து எழுத்தில் இருளன் என்ற கடவுள் பெயர் உள்ளது.
சிந்துவெளியில் முதன்மை கடவுளர்களாக சிவன் (சன்னா), இருளன், கொற்றவை (கொற்ற), முருகன் (அயிலன்/ முருகு) போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
இவர்களில் இருளன் என்று அழைக்கப்பட்டது சிவன் என்றே பூரண சந்திர ஜீவா அவர்கள் மொகஞ்சதாரோவில் கிடைக்கப்பெற்ற 1623, 2847 இலக்கமிடப்பட்ட இரண்டு முத்திரைகளின் வாசிப்பின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருளனின் உடல் தோற்றத்தினை வர்ணிக்கும் முத்திரைகளும் கிடைத்துள்ளன. உதாரணமாக மொகஞ்சதாரோவில் கிடைக்கப்பெற்ற 2230 இலக்கமிடப்பட்ட முத்திரையில் இருளனய என்று இருளனின் கருமை நிறத் தோற்றத்தை இருளுக்கு ஒப்பானவன் என்று சித்தரிக்கின்றது.
ஹரப்பாவில் கிடைக்கப்பெற்ற 4044 இலக்கமிடப்பட்ட முத்திரையில் இருள்ளணா ஆ என்று உள்ளது. அதாவது இருளனாகிய அண்ணல் என்று இருளனை உயர்வானவர் என சிறப்பிக்கப்படுகின்றது.
மொகஞ்சதாரோவில் கிடைக்கப்பெற்ற 3118 இலக்கமுடைய முத்திரையில் ஈசாஇருணாய ஆ என்று உள்ளது இதன் பொருள் ஈசன் ஆகிய இருளனின் பசு என்ற அர்த்தத்தில் உள்ளதால். சிவனும் இருளனும் ஒரே கடவுள்தான் என பூரணசந்திர ஜீவா அவர்கள் குறிப்பிடுகின்றார். எனவே நெடுங்கேணியில் கிடைக்கப்பெற்ற சூதுபவளம் கல்லில் உள்ள சிந்துவெளி எழுத்துக்கள் இருளன் ஆகிய சிவனையே குறிக்கின்றது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
நாக வழிபாடு
முனைவர் இரா.மதிவாணனின் நூல்களில் உள்ள சிந்துவெளி எழுத்துக்களை அடிப்படையாகக்கொண்டு ஒப்பு நோக்கும்போது மேலே உள்ள இரு கோடுகள் “ண” என்ற பொருளையும், மூவிலை கொண்ட இரு கிளைகளும் “க” என்ற பொருளிலும் இறுதியில் உள்ள ஐந்து முனைகளையுடைய வடிவம் “ய்ய” என்ற பொருளைத் தருகின்றது. இதனை ணா+க+ய்ய= ணாகய்ய என்ற பொருளைத் தருகின்றது.
இரா.மதிவாணனின் எழுத்து முறையானது பூரணசந்திர ஜீவாவின் எழுத்து முறைக்கு முற்றிலும் மாறாகவே உள்ளது. எனினும் நாக வழிபாடு இலங்கையின் புராதன காலம் தொட்டு இருந்ததற்கான தொல்லியற் சான்றுகள் கட்டுக்கரை, நாகபடுவான் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்றன. மற்றும் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிவேம்பு, பாற்சேத்துக்குடா போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓட்டில் நாகன் என்பதற்கு பதிலாக ணாகன் என்று எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் சிந்துவெளி நாகரீகத்தில் நாக வழிபாடு இருந்ததை தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இது எந்த அளவிற்கு பொருத்தப்பாடு உள்ளது என்பது ஆய்வுக்குரியதாகும்.
பேராசிரியர் க.த.திருநாவுகரசின் “சிந்துவெளி எழுத்து வடிவங்கள்” என்னும் நூலினை அடிப்படையாகக்கொண்டு ஒப்பு நோக்கும்போது, சிந்துவெளியின் குறியீடுகளை பட எழுத்து முறையிலேயே விளக்கியுள்ளார்.
மேலே உள்ள இரு கோடுகள் “இருவரை” குறிப்பது என்றும், அடுத்து உள்ள இரு கைகளும் “மன்னன்” என்ற பொருளை தருகின்றது என்றும், இறுதியாக உள்ள ஐந்து தலைகளை உடைய திரிசூலம் “சிவனை” குறிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே சேர்த்து பார்க்கும்போது இருவர்+மன்னன்+சிவன் என்ற அர்த்தத்தில் உள்ளது.
சிந்துவெளி – ஈழம் தொடர்பு
எனவே, வன்னி பிராந்தியத்தில் கிடைக்கப்பெற்ற சிந்துவெளி எழுத்துக்களுடன் கூடிய சூதுபவளக்கல்லின் அடிப்படையில் நோக்கும் போது இக்கல்லானது சிந்துவெளிக்கும் ஈழத்துக்கும் இடையிலான பண்பாட்டுத் தொடர்பினை அறிந்து கொள்ள முடிகின்றது.
மற்றும் இக்கல் வகையினை மேல்நிலை மக்களே அங்கு அதிகம் பயன்படுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் வன்னி பகுதியிலும் இந்த கல்வகையினை பயன்படுத்தக்கூடிய மேல்நிலை மக்கள் சிந்துவெளி காலத்தில் வாழ்ந்திருக்ககூடும் என்ற முடிவிற்கு வர இயலும்.
மேலும், இச்சூதுபவளத்தில் காணப்படும் எழுத்துக்களினை சில ஆய்வாளர்களின் நூல்களின் அடிப்படையில் நோக்குகையில் சிந்துவெளி எழுத்து ஆய்வாளர் பூரணசந்திர ஜீவா- இருய்யணா (இருளன்), முனைவர் இரா.மதிவாணன்- ணகய்ய (ணாகய்ய), பேராசிரியர் க.த.திருநாவுக்கரசு இருவர்+மன்னன்+சிவன் எனக் கருத முடிகின்றது.
இதில் இருவருடைய கருத்துக்களிலும் பார்க்க பூரணசந்திர ஜீவா அவர்களி கருத்து ஏற்புடையதாக அமைகின்றது எனக் கருதுகிறேன். ஏனெனில் “இருளன்” என்பது சிவனைக் குறிப்பதாகும். சிவ, கொற்றவை,முருக வழிபாடு என்பன நாகர்களுடையது தொடர்பாக சான்றாதாரங்கள் ஈழத்தில் ஆதிகாலம் தொடக்கம் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவை நாகர்களுடைய தேவதைகள் எனவே இச்சூதுபவளத்தில் காணப்படும் சிவ வழிபாடு சிந்துவெளி காலத்தில் ஈழத்திலும் நிலவியது என்ற முடிவுக்கு வரமுடிகின்றது.
சிந்துவெளிகாலத்து சமகாலப்பகுதியில் ஈழத்திலும் சிந்துவெளிப் பண்பாடானது நிலவியதற்கும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்பதற்கும் இவை ஆதாரமாகின்றது.
உசாத்துணைகள்
இந்த ஆய்வு முயற்சிக்காக ஆய்வாளர் பயன்படுத்திய உசாத்துணை விபரம் பின்வருமாறு அமைந்துள்ளதும் நோக்கத்தக்கது.
1) இராசமாணிக்கம்.மா, 1907, மொகஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரீகம், Appar Achakam.
2) திருநாவுக்கரசு.க.த, 1982, சிந்துவெளி எழுத்து வடிவங்கள், மணியக வெளியீடு.
3) சாமி.பி.எல்., 1984, தமிழ் நாட்டில் சிந்துவெளி எழுத்தோவியங்கள், சேகர் பதிப்பகம்.
4) பூரணசந்திர ஜீவா, 1990, சிந்துவெளியில் தமிழ் மொழி- புதிய ஆய்வுகள், தய்யல் பதிப்பகம்.
5) மதிவாணன்.இரா, இடைக்கழகச் சிந்துவெளி எழுத்து படிப்பது எப்படி?, எழிலினி பதிப்பகம்.
6) பூரணசந்திர ஜீவா, சிந்துவெளியில் முந்து தமிழ், யாழிசை பதிப்பகம்.
7) மதிவாணன்.இரா, திராவிட மக்களின் சிந்துவெளி எழுத்துக்கள், சேகர் பதிப்பகம்.
8) Madhivanan.R, Indus Script Dravidian, Tamil chanror peravai.
9) அஸ்கோ பர்போலா, 2009, சிந்துவெளி எழுத்து, தமிழோசை
10) சந்திர சேகரன், சிந்துவெளி செந்தமிழ், நியூ சென்னை பப்ளிக்கேஷன்ஸ்.
11) குருமூர்தி.சா, 2010, சிந்துவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகமும், தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
12) ஆதி வள்ளியப்பன், ஆதி இந்தியர்கள்’ வெளிச்சத்தில் தமிழர்களின் ஆதி நிலம், பாரதி புத்தகாலயம்.
13) விக்டர்.ம.சோ, சிந்துவெளி நாகரிகம், மீனாட்சி புத்தக நிலையம்.
14) நெடுமாறன்.பழ, சிந்து நாகரிகமும் பழந்தமிழர் நாகரிகமும், பாரதி புத்தகாலயம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு,
26 August, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>