இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக பல அரசியல்வாதிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
நாட்டில் அநுர அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மக்கள் ஆதரவு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக தமிழ் பிரதிநிதிகள் உட்பட பல சிங்கள அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றி, தமது அரசியல் இருப்பை தங்க வைத்துக் கொண்டவர்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல்வாதிகளின் செயற்பாடுகள்
சமகாலத்தில் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் குறித்து மக்கள் மிகவும் தெளிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்ச்சி அச்ச நிலையில் உள்ளன.
இதில் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என மக்களை ஏமாற்றிய தமிழ் அரசியல்வாதிகள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் தீவிரமாக உள்ளனர்.
அதேபோன்ற தென்னிலங்கையிலும் பல அரசியல்வாதிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தம்மை விலகியுள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து, தேசிய பட்டியல் ஊடாக உள்நுழைய திட்டம் வகுத்துள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தல்
இதுவரையில் சுமார் 30க்கும் மேற்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக இல்லையா என்பது தொடர்பில் கடும் குழப்பம் அடைந்துள்ளனர்.
மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம், நிதிப் பிரச்சினைகள், அரசியலில் ஏற்பட்ட விரக்தி, குறிப்பிட்ட கட்சியைத் தேர்வு செய்ய முடியாமல் போனது போன்ற பிரச்சினைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் பெரும் நெருக்கடியில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
நிதி நெருக்கடி
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டிய தேவையிருப்பதால், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க போதிய கால அவகாசம் இல்லாததே இதற்கான காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் சில கட்சிகள் சின்னம் தேர்வு மற்றும் கூட்டணி அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க முடியாமல் உள்ளதால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவிடம் வினவியபோது, நிதிப் பிரச்சினை காரணமாக பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல்
இதனிடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தாம் முடிவெடுக்கவில்லை என அண்மையில் தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார்.
தேர்தலுக்கு செலவு செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தினால் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பல உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.