இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) சார்பில் போட்டியிட்ட இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) 65,458 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
நேற்று (14) நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் தேர்தல்கள்
திணைக்களத்தினால் (Election Commission) இன்று (15) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 96,975 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி (NPP) 55,498 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தினையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 40,139 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு தெரிவானோர்
அத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) 31,286 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 22,570 வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 14,540 வாக்குகளையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள விருப்பு வாக்குகளின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இரா.சாணக்கியன் 65,458 வாக்குகளையும், ஞா.சிறிநேசன் 22,773 வாக்குகளையும் இ.ஸ்ரீநாத் 21,202 வாக்குகளையும் பெற்று தெரிவாகியுள்ளனர்.
மேலும் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட கந்தசாமி பிரபு 14,856 வாக்குகளை பெற்றுள்ளதுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 32,410 வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.