Home இலங்கை அரசியல் நாளை முதல் கூடவுள்ள நாடாளுமன்றம் : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

நாளை முதல் கூடவுள்ள நாடாளுமன்றம் : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

0

நாடாளுமன்றம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர (Kushani Rohanadeera) தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன (Jagath Wickramarathne) தலைமையில் கடந்த வாரம் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

இதனையடுத்து 10.00 மணி முதல் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 மணி முதல் 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் 22ஆம் திகதி 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது), வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2016ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது) மற்றும் சேவையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு ஆகியவற்றுக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய மூன்று சட்டமூலங்களும் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் 5.00 மணி முதல் 6.00மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

23ஆம் திகதி 11.30 மணி முதல் 5.00 மணி வரை கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 அனுதாபப் பிரேரணை

இதனைத் தொடர்ந்து 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிவரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை 11.30 மணி முதல் 5.00 மணி வரை இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஆளும்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

மறுநாள் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை 11.30 மணி முதல் 5.00 மணி வரை மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், அபேரத்ன பண்டார ஹேரத் பிலபிட்டிய, டபிள்யூ.பி.ஏக்கநாயக்க, லக்கி ஜயவர்தன மற்றும் மாலினி பொன்சேகா ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version