நாட்டில் தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு (Colombo) – அவிசாவளை (Avissawella) ஹைலெவல் வீதி எஸ்வத்த சந்தியிலிருந்து ஹிங்குரல சந்தி வரையான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் குறித்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மண்சரிவு எச்சரிக்கை
இதேவேளை, நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் ஹன்வெல்ல (Hanwella) பிரதேசத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியான 196.5 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கம்பஹா திவுலபிட்டிய பிரதேசத்தில் 173.5 மில்லிமீற்றர் மழையும் களுத்துறை (Kalutara) வொகன் தோட்டப் பகுதியில் 163.5 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.
மேலும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (National Building Research Organization) 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தெற்கு அதிவேக வீதி
இதன்படி, காலி, களுத்துறை, கேகாலை (Kegalle) ஆகிய மாவட்டங்களுக்கு 02ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
பதுளை (Badulla), கொழும்பு, கம்பஹா, மாத்தறை, நுவரெலியா (Nuwara Eliya) மற்றும் இரத்தினபுரி (Ratnapura) ஆகிய மாவட்டங்களுக்கு 01ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை வெள்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் உள்ள வெலிப்பன்ன இடமாற்றத்தை தற்காலிகமாக மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.