Home முக்கியச் செய்திகள் நல்லூர் உற்சவ நாளில் தமிழரசுக் கட்சியின் தீர்மானம்: சிறீதரன் கடும் கண்டனம்

நல்லூர் உற்சவ நாளில் தமிழரசுக் கட்சியின் தீர்மானம்: சிறீதரன் கடும் கண்டனம்

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்துக்கான எதிர்வினையை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையின் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) மற்றும் மாவட்ட ரீதியாகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளாத நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர்

குறிப்பாக நல்லூர் உற்சவநாளில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்தக் கூட்டத்தில் சுகவீனம் காரணமாகக் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்திருந்ததாகவும், சிறீதரன் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலமாகக் கூட்டத்துக்கு தெரியப்படுத்தி இருந்ததாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் சீ.வீ.கே. சிவஞானம் (C V  K Sivagnanam) தெரிவித்துள்ளார்.

மத்தியக் குழு

எனவே சிறீதரனின் நிலைப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சித் தலைவர் இல்லாமல் மத்திய செயற்குழு தீர்மானங்களை எடுக்கக்கூடாது என்று கட்சி யாப்பில் இல்லை என்றும், தீர்மானம் எடுப்பதற்குத் தேவையான கோரத்தை விட அதிகமான உறுப்பினர்கள் பங்குபற்றி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கட்சியின் மத்தியக் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் சரியானது என்றும், இந்தத் தீர்மானம் உரியத் தரப்பினருக்கு உரிய வகையில் அறிவிக்கப்படும் என்றும் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version