13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை
நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் நிறுவனம் பெப்ரல் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துரையாடலொன்றை
மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை
அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.
தென் பகுதியில் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அரச சார்பற்ற நிறுவனமான
பெப்ரல், குறித்த விடயம் தொடர்பில் அனைத்து மாகாணங்களையும்
உள்ளடக்கிய வகையில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து
வருகின்றது.
அரசியல் அபிலாசைகள்
இதன் ஒரு பகுதியாக இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில், கட்சியின் செயலாளர்
நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சிரேஸ்ட ஆலோசகரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள்
எதிர்க் கட்சி தலைவருமான சி.தவராசா கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “எமது கட்சியின் நிலைப்பாடு, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக
நடைமுறைபடுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின்
அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதை இலக்காக கொண்டது.
அதனடிப்படையில் 13ஆம் திருத்தத்தினை மூன்று கட்டங்களாக நடைமுறைபடுத்துவதன்
ஊடாக முழுமையாக அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம்.
சட்ட ஏற்பாடுகள்
முதலாவதாக, நிறைவேற்று செயற்பாடுகள் ஊடாகவும் நிர்வாக செயற்பாடுகள் ஊடாகவும்
மாகாணங்களில் இருந்து எடுக்கப்பட்ட விடயங்களை மீளக் கையளிப்பது. இதனை
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்த முடியும்.
இரண்டாவது, 13ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட முன்னர் நடைமுறையில்
இருந்த சில சட்ட ஏற்பாடுகளுக்கும் 13ஆம் திருத்தச்சட்டத்தில் சொல்லப்பட்ட சில
விடயங்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளில் கணிசமானவற்றை
நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மை ஊடாக திருத்திக் கொள்ள முடியும்.
மூன்றாவது கட்டமாக, அரசியலமைப்பில் அடிப்படையில் ஏதாவது மாற்றங்களை
ஏற்படுத்துவது தொடர்பில் சிந்திப்பது
இதை எமது கட்சி அன்றிலிருந்து இன்றுவரை எந்தவித மாற்றமோ வழுவழுப்புக்களோ
இல்லாது பல தடைகள் வந்தபோதும் எடுத்துக் கூறியிருக்கின்றது.
அதேபோன்று இந்த நிலைப்பாட்டை பலவிதமான சந்திப்புகள் ஆணைக்குழுக்கள்
முன்னிலையிலும் கூறி உள்ளோம் ” என சுட்டிக்காட்டியுள்ளார்.