Home இலங்கை அரசியல் இரண்டாகப் பிரிந்துள்ள தமிழரசுக் கட்சி : சித்தார்த்தன் பகிரங்கம்

இரண்டாகப் பிரிந்துள்ள தமிழரசுக் கட்சி : சித்தார்த்தன் பகிரங்கம்

0

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் பிரிந்து இருப்பதாகவும் முக்கியமாக தமிழரசுக் கட்சி இரண்டாக பிரிந்து போட்டியிடுவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் (D.Siddharthan) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் (Vavuniya) நேற்று (20) இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (PLOT) வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு எவ்வாறு
முகம் கொடுப்பது மற்றும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் எமது
இரு வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்பதை தெரிவிப்பதற்காகவே இதனை ஏற்பாடு செய்துள்ளோம்.

தமிழ் மக்களின் விடுதலை

தேர்தல் பிரசாரத்தினை எமது கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி ஏனையவர்களும் வன்னியிலே முன்னெடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி (DTNA) ஒரு முன்னிலையில்
காணப்படும் கட்சியாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தமிழ் மக்களை பொறுத்தவரை
இக் கட்சியினை தங்களுடைய கட்சியாகவே பார்க்கின்றனர்.

மேலும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் வரக்கூடிய ஆசனங்களில் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களைப் பெற்று நிச்சயமாக முன்னணி இடத்தினை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். இத்தேர்தலில் ஒரு ஆசனம் கிடைத்தாலும் அது எங்களது வெற்றியாகவே பார்க்கின்றோம்.

குறிப்பாக தமிழ் மக்களினுடைய ஒரு கட்சியாகவும் தமிழ் மக்களின் விடுதலைக்கான
பாதையினை காட்டக் கூடிய கட்சியாகவும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வெல்ல வேண்டும்
என்பதே எங்களது நோக்கமாக இருக்கின்றது.

தமிழரசுக் கட்சி 

தமிழ் கட்சிகளை பொறுத்தவரையிலே பிரிந்து இருக்கின்றன. முக்கியமாக தமிழரசுக்
கட்சி இரண்டாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றால் மூன்றாக பிரிந்து
நிற்கின்றன. மேலும் தமிழரசுக் கட்சி இருவராக பிரிந்து போட்டியிடுகின்றனர். நாங்கள் ஒருவராக
போட்டியிடுகின்றோம்.

கடந்த தேர்தலிலே 40க்கு மேற்பட்ட கட்சிகள் மற்றும்
சுயேட்சை குழுக்கள் போட்டியிட்டிருந்தன. இந்த நிலைமை இங்கு மட்டுமின்றி ஏனைய
இடங்களிலும் அதிகமாகவே இருந்தது. தற்போது இந்த நிலை சற்று அதிகமாக
காணப்படுவதோடு அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையிலே மக்கள் தங்களுக்கு எந்த கட்சி தேவை அல்லது எந்த கட்சி தங்களது
பிரச்சினைகளை சரியான முறையிலே கையாளும் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள்.

தற்போதைய தேர்தலிலே பல காரணங்களுக்காக சுயேட்சைக் குழுக்களில் பலர்
போட்டியிட்டாலும் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. குறிப்பாக இது கடந்த
கால தேர்தல்களிலும் காணக்கூடியதாக இருந்ததோடு தற்போதைய தேர்தலிலும் இருக்கும்.

தேர்தல் ஆணைக்குழு

எனினும் கட்சிகளின் மத்தியிலே எங்களது கட்சி முன்னணியில் இருக்கும் என
நம்புகின்றேன்.

கடந்த காலங்களில் தமது உயிர்களையும் துச்சம் எண்ணி போராடிய ஐந்து கட்சிகளை
உள்ளடக்கி ஒரு கூட்டமைப்பாக தமிழ் மக்கள் விரும்புகின்ற ஒற்றுமையுடன்
பயணிக்கின்ற ஒரு கட்சியாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி போட்டியிடுகின்றது.

கடந்த காலங்களைப் போல் அல்லாமல் ஐந்து கட்சிகள் இணைந்து தேர்தல் ஆணைக்குழுவில் ஒரு கட்சியாக பதியப்பட்டு பயணிக்கின்றோம்.

எங்களுக்குள்ளே சில சில
பிரச்சினைகள் தேர்தல் காலத்தில் ஏற்பட்டிருந்தாலும் கூட தமிழ் மக்களின்
பிரச்சினைகளில் ஒன்றாக நிற்பதோடு தமிழ் மக்களின் விடுதலைக்காக ஒன்றாக
உழைப்பதோடும், கடந்த காலங்களிலே இக்கூட்டணியில் உள்ள கட்சிகள்
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் போது இப்பிரதேசங்களின் பொருளாதார
அபிவிருத்திக்காக உழைத்திருக்கின்றோம்.

மக்களைப் பொறுத்தவரை ஒரு நம்பிக்கைக்குரிய கட்சியாக ஜனநாயக தமிழ் தேசியக்
கூட்டணி இருக்கின்றது என்பதை நான் நம்புகின்றேன்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version