Home முக்கியச் செய்திகள் கிளிநொச்சியில் கிராமசேவையாளருக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்

கிளிநொச்சியில் கிராமசேவையாளருக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்

0

Courtesy: linton

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவிநகர்,
ஆராதிநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது கிராம சேவையாளருக்கு எதிரான
கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.

100 ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிராம சேவையாளர் நேரில் சென்று பார்வையிடவில்லை என
மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கிராமசேவகர் கீழ்த்தரமான பேச்சு

தமது நிலைமையினைப் பார்வையிடுமாறு தொலைபேசியூடாக கேட்ட குடும்பப்பெண்ணிடம்
‘சோத்துக்கு வழியில்லாதவர்களுக்கு சாமான் கொடுக்கவில்லை’ என கீழ்த்தரமாக
ஏசியதாகவும் கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக
பார்வையிட்டு அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் உதவிகளையும் வழங்குமாறு கோரிய
நிலையில் தாம் பல வாரங்களாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையிலும் கிராம
சேவையாளர் தம்மைப் பார்வையிட்டு அனர்த்தம் தொடர்பான எவ்வித பதிவினையும்
மேற்கொள்ளவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

தம்பகாமம் kn 86 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவிநகர்,
ஆராதிநகர் ஆகிய பகுதிகளில் யுத்தத்தின் பின் மக்கள் படிப்படியாக
மீளக்குடியேறினர். அவர்களில் காணியற்ற மக்களுக்கு அரச காணிகள் வழங்கப்பட்டன.

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பிரதேசம்

வழங்கப்பட்ட காணிகளில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மாரி காலங்களில்
மக்களின் வீடுகள் மற்றும் தோட்டக்காணிகளில் வெள்ளம் புகுந்து பிரதேசமே
வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

இதனால் அன்றாடம் தொழில் செய்யும் வண்ணாங்கேணி, சஞ்சீவிநகர், ஆராதிநகர் ஆகிய
கிராமங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது.

 குழந்தைகள், முதியவர்கள் வசிக்கும் வீடுகளில் இடுப்பிற்கு மேல் வெள்ளம்
நிற்பதால் தம்மால் தொடர்ச்சியாக மழைக்காலம் நிறைவடையும் ஐந்து மாதங்கள்
வரையும் தாம் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் பிரதேச மக்கள்
தெரிவிக்கின்றனர்.

முட்டுக்கட்டை போடும் கிராமசேவகர்

குறித்த பகுதியிலுள்ள குளம் ஒன்றினை புனரமைப்பு செய்து வெள்ளநீர் முறையாக
வழிந்தோடுவதற்கு கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து, ஏனைய அரச தரப்புக்களிடம்
அனுமதி பெற்ற நிலையிலும் கூட அதற்கு கிராம சேவகர் முட்டுக்கட்டை போடுவதாகவும்
பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே குறித்த விடயம் தொடர்பில் பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் தமக்கு
தீர்வினைப் பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கிராம அமைப்புக்கள், கமக்கார
அமைப்புக்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version