பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் நான்கு சிரேஷ்ட மாணவர்களின் கல்வியை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
முதலாமாண்டு மாணவர்கள் இருவர் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்து தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த சிரேஷ்ட மாணவர்களின் கல்வி தகமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மீது தாக்குதல்
கடந்த 12ஆம் திகதி இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த இரண்டு மாணவர்களும் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தாக்குதல் மேற்கொண்ட நான்கு மாணவர்களும் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் கல்வி பயின்று வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று விசாரணை
குறித்த நான்கு மாணவர்களுக்கு எதிராக பேராதனை பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்றுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு தீர்மானம் எட்டப்படும் வரை அவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் காது ஒன்று பலத்த சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.