Home இலங்கை சமூகம் பெருந்தோட்ட மக்களுக்கு வெளியான நற்செய்தி: கிடைத்தது அங்கீகாரம்

பெருந்தோட்ட மக்களுக்கு வெளியான நற்செய்தி: கிடைத்தது அங்கீகாரம்

0

பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பகுதிகளைப் புதிய குடியேற்ற கிராமங்களாக அமைத்து அவற்றை சட்டரீதியாக பிரகடனப்படுத்துவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த திட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் அதிபர் அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்றது.

கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, மக்களுக்கு நிரந்தர காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அதற்குத் தேவையான புரட்சிகர வேலைத்திட்டம் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

காணி உரிமை

அரச பெருந்தோட்டக் கம்பனி மற்றும் உள்ளூர் பெருந்தோட்டக் கம்பனிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை புதிய கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்தத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என்பதாலும் காலத்திற்கு உகந்த முன்மொழிவு என்பதாலும் இதற்கான கொள்கை ரீதியான உடன்பாடும் எட்டப்பட்டது.

இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்தும் போது மலையகத்தில் வாழும் அனைத்து மக்களினதும் காணி உரிமையை உறுதிப்படுத்துவது இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan), இது தொடர்பான பிரேரணையை அதிபரிடம் கையளித்துள்ளார்

குறித்த நிகழ்விற்கு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman), கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் (Aravind Kumar), பழனி திகம்பரம் (Palani Digambaram), வடிவேல் சுரேஸ் (Vadivel Suresh), வேலு குமார் (Velu Kumar), எம். ராமேஸ்வரன் ((Marudapandy Rameshwaran) மற்றும் எம். உதயகுமார் (M. Udhayakumar) ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிரிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version