சமூக நிறுவனம் மூலம் துவிச்சக்கர வண்டிகளை பெற்று தருவதாக நிதி மோசடி செய்த
சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த நபர் பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளருக்கு பணத்தை
மீள வழங்கியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, சமூக நிறுவனம் ஒன்றிடம் குறைந்த
விலையில் துவிச்சக்கரவண்டிகள் இருப்பதாக சுமார் 90 ஆயிரம் ரூபா வரை பெற்று
மோசடி செய்துள்ளார்.
தன்னை சண்டிலிப்பாய் பிரதேச கிராம சேவையாளர் ஒருவரின் தம்பி என அறிமுகமாகியே
குறித்த நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
முன்வைக்கப்படுகிறது.
முறைப்பாடு
குறித்த விடயம் தொடர்பில் சண்டிலிப்பாய் பிரதேச உதவி பிரதேச செயலாளரும் தமக்கு
இவ்வாறான ஒரு முறைப்பாடு கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் மானிப்பாய் பொலிசாரிடம், பணத்தை முறையற்ற விதத்தில்
வாங்கியவர் பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை பதிவு
செய்திருந்தார்.
அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் தனக்கு எதிரான செய்தியை பரப்பியதாக முறைப்பாடு
வழங்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட நபரை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்தனர்.
பலர் ஏமாற்றம்
பொலிஸார் பணத்தை தவறான முறையில் வாங்கியவர் மீது கடுமையாக நடந்து கொள்ளாது
ஊடகங்களில் செய்தி வந்தது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரை கேள்விக்கு மேல்
கேள்வி கேட்டதுடன் பிரதேச செயலாளரிடம் கொடுத்த முரண்பாட்டை மீளப் பெறும்படி
எச்சரிக்கை விடுத்ததாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் துவிச்சக்கர வண்டி வாங்கி தருவதாக ஏமாற்றி 90ஆயிரம் ரூபாய்
பணத்தை இழந்த முறைப்பாட்டாளரின் வங்கி கணக்குக்கு பணம் வரவிடப்பட்டுள்ளது.
தனது பிரச்சினையை வெளிப்படுத்தி பணத்தை மீள பெற்று தந்த ஊடகங்களுக்கு அவர்
நன்றி தெரிவித்ததுடன் தன்னைப் போன்ற இன்னும் பலர் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில்
அவர்களும் துணிந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய முன்வருமாறு
கோரிக்கை முன்வைத்தார்.
