முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) குடும்ப உறுப்பினருக்கு சொந்தமான வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை செயற்படுத்துவதற்கு தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (03) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைய கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களைத் தடை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்
குறித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்கள் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட மனுக்கள் தொடர்பில் ஆரம்பக் காரணிகளைக் கருத்தில் கொண்டதன் பின்னர், ஜனக் டி சில்வா தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
