Home இலங்கை சமூகம் நாட்டில் மூடப்படும் அபாயத்தில் மருந்தகங்கள் : வெளியான தகவல்

நாட்டில் மூடப்படும் அபாயத்தில் மருந்தகங்கள் : வெளியான தகவல்

0

நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்வதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையானது (NMRA) மருந்தகங்களின் செயற்பாட்டிற்கு தகுதிவாய்ந்த மருந்தாளரின் முழுநேர இருப்பை கட்டாயமாக்கியுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக இந்த விடயத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அமைச்சரைத் தொடர்பு கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றும் இதனால் ஜனவரியில் நிலைமை மோசமடையும் என்றும் அச்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

கிராமப்புற நோயாளிகள் 

இது குறித்து அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்த்தின் தலைவர் சண்டிக கங்கந்த (Chandika Kanganda) தெரிவிக்கையில், “தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமையைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அமைச்சர் மற்றும் தொடர்புடையவர்களை நாங்கள் கோரி வருகிறோம், ஆனால் எங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

குறித்த முடிவினால் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். நாடளாவிய ரீதியில் செயற்படும் மருந்தகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுகின்றார்கள். கிராமப்புறங்களில் உள்ள மருந்தகங்கள் மூடப்படுவது அப்பகுதிகளில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு இடையூறாக உள்ளது, ஏனெனில் அம்மக்கள் மருந்துகளைப் பெற கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆகவே இந்த வியடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்து மோசமடையும் ஆபத்துள்ளது.

மருந்தாளரின் பதிவு முறையை அகற்றுவதல்ல எமது கோரிக்கை தகுதிவாய்ந்த மருந்தாளுநர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே எமது கோரிக்கையாகும்.

 6,700 மருந்தாளர்கள் 

நாடு முழுவதும் தற்போது செயற்பாட்டில் உள்ள 5,100 மருந்தகங்களில், தகுதிவாய்ந்த மருந்தளர்கள் பற்றாக்குறையால் பல மருந்தகங்கள் மூடப்படும் நிலைமையில் உள்ளன.

அத்தோடு தகுதிவாய்ந்த நபர்கள் வெளியேறுவதால் நாட்டில் மருந்தாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நவம்பர் மாத நிலவரப்படி, இலங்கை மருத்துவ கவுன்சிலின் மீளாய்வுக்கு அமைவாக 6,700 மருந்தாளர்கள் மட்டுமே செயற்பாட்டில் உள்ளனர்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின்படி, மருந்துகள், மருத்துவ சாதனங்கள் அல்லது தயாரிப்புகளை விநியோகிப்பது ஒரு மருந்தாளர் அல்லது ஒரு பதிவுசெய்யப்பட்ட பயிற்சி மருந்தாளரால் தலைமை மருந்தாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றுள்ளது.

தகுதிவாய்ந்த மருந்தாளர்களைப் பணியமர்த்துவதற்கான தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் எதிர்பார்ப்பு நியாயமானதாக இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை.

மருந்தாளுநர்களுக்கான தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் விண்ணப்பத்தில், இலங்கை மருத்துவக் கவுன்சிலால் வழங்கப்படும் மருந்தாளநர் தகுதி அல்லது செயற்திறன் சான்றிதழ் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மருந்தாளர்களுக்கான அரசாங்கத்தின் பரீட்சையில் தேர்வில் 5 சதவீமானவர்களே தேர்ச்சி பெறுகிறார்கள்“ என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version