Home முக்கியச் செய்திகள் அநுரகுமார திஸநாயக்கவை பதற்றமடைய வைத்த புறா

அநுரகுமார திஸநாயக்கவை பதற்றமடைய வைத்த புறா

0

ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) புறா ஒன்றின் மூலம் பதற்றமடைந்த சம்பவம் சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை(13) தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை(ampara) மாவட்டத்திற்கான சம்மாந்துறை தொகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றிருந்தது.

இதன்போது மக்கள் மத்தியில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்க உரையாற்றி கொண்டிருந்தார்.

சிவப்பு நிற மின்னொளி

அவர் உரையாற்றி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மேடையை அண்மித்த வானத்தில் இருந்து சிவப்பு நிற மின்னொளி பாய்ச்சப்பட்டு ஏதோவொரு மர்மபொருள் நகர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில் இக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸநாயக்க உடனடியாக உசாரடைந்ததுடன் தனது பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய மேடையில் இருந்து சிறிது நேரம் பாதுகாப்பிற்காக அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டார்.

காவல்துறை விசாரணை

கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று முடிவடைந்த பின்னர் சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில் காவல் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான காவல்துறை குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

  இதன் போது கூட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து LED LIGHT பொருத்திய ‘புறா’ பறந்து சென்றதை விசாரணை ஊடாக அறிந்ததுடன் அப்பகுதியில் புறா வளர்ப்பில் ஈடுபடும் 18 மற்றும் 19 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்களை திங்கட்கிழமை (16) கைது செய்து விசாரணை செய்தனர்.

சமூக ஊடகங்களில் காணொளி

இதன்போது கைதானவர்கள் சமூக ஊடகங்களில் காணொளியை பதிவு செய்வதற்காக இரவு வேளையில் புறாவின் காலில் ஒரு வகையான மின் குமிழினை பொருத்தி அதனை தினமும் பறக்க விடுவதாக தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைதான இருவரையும் சம்மாந்துறை காவல்துறையினர் எச்சரிக்கை செய்து விடுதலை செய்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரின் தந்தையார் ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

https://www.youtube.com/embed/wUT4FY2fFs0

NO COMMENTS

Exit mobile version