ஜனநாயகத்தை நம்பி ஆயுதங்களை விட்டு வந்த எமக்கு தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டது.கோட்டாபயவை(gotabaya) ஜனாதிபதியாக தெரிவு செய்தமை குறித்து வெட்கித் தலைகுனிந்ததாக இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(sivanesathurai santhirakanthan) தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு(ranil wickremesinghe) ஆதரவு தெரிவித்து நடைபெற்ற இயலும் சிறிலங்கா கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு தடவை சந்தர்ப்பம்
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” என்ற திருக்குறளின் படி நாம் நன்றி மறவாது ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு தடவை சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.நாட்டை மிகவும் இக்கட்டான நிலையில் இருந்து மீட்டவர் அவர்.
சிறந்த இராஜதந்திரி என்ற வகையிலும் நாம் ஜனாதிபதியை ஆதரித்துள்ளோம். அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கும் நாம் நாடாளுமன்றத்தில் உதவி செய்தோம்.
2002 இல் புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்யப்பட்ட போது ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தார். அதன் பின்னரே நான் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியில் வந்தேன்.
அதிகாரப் பகிர்வுகளை வழங்க வேண்டும்
எதிர்காலத்தில் சாத்தியமான அதிகாரப் பகிர்வுகளை வழங்க வேண்டும். தேர்தலின் பின்னர் அதனை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அதற்காகவும் அவரை ஆதரிக்கிறோம்.
விவசாயம்,மீன்பிடி,கைத்தொழில் துறை சார்ந்ததாக கிழக்கின் அபிவிருத்திக்கு பல திட்டங்களை ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படும் நிலையில் எமது பிரதேச தந்தையர்களின் கனவு நனவாகும்.
ஜனாதிபதிக்காக வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க இருக்கிறோம். ஜனாதிபதியின் வெற்றியில் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் சிறப்பான வெற்றியைக் காண்பிக்க வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்பது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கோரிக்கையாகும். எமது வளங்களை பயன்படுத்தும் வகையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். எமது மக்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும். எமது ஜனாதிபதி பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றிபெறுவது உறுதி” என்றும் தெரிவித்தார்.