டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.
அத்துடன் துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தினார்.
நேற்றுமுன்தினம்(07) ஞாயிற்றுக்கிழமை அவரது இந்த விஜயம் அமைந்தது.
பல்கலை பெரும் சேதம்
நவம்பர் 27 ஆம் திதி இரவு மகாவலி நதி நிரம்பி வழிந்ததால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த வெள்ளத்தில் பல பீடங்கள் மூழ்கி பல்கலைக்கழகம் பெரும் சேதத்தை சந்தித்ததை அடுத்து இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் ஏராளமான மாணவர்கள் வளாகத்தில் இருந்தனர். பெரும்பாலானோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தேவையான உதவிகள் கிடைக்கும்
தனது வருகையின் போது, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற முயற்சிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவை பிரதமர் வலியுறுத்தினார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் அவர் பேசினார், பல்கலைக்கழக சமூகத்தின் பாதிக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் தேவையான உதவிகள் கிடைக்கும் என்று அவர்களுக்கு உறுதியளித்தார்.
இந்த கலந்துரையாடலில் குறுகிய கால திட்டத்தின் கீழ், வெள்ளத்தால் நேரடியாக பாதிக்கப்படாத பீடங்களை விரைவாக மீண்டும் திறப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மூன்று மணி நேரம் நீடித்த கலந்துரையாடலின் போது, துணைவேந்தர் பல்கலைக்கழக கட்டிடங்கள் மற்றும் சொத்துக்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
பிரதமருடன் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவா மற்றும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க ஆகியோரும் வருகை தந்தனர்.
