செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களைச் சிறையில் அடைப்பேன் என்று
சாவகச்சேரி (Chavakachcheri) பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளார் என்று
தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவுக்கமைய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று (17)
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் செய்தி அறிக்கையிட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக
ஊடகச் செயற்பட்டாளர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடியுள்ளனர்.
முறைப்பாடு
இந்நிலையில், அங்கு கூடிய ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகச்
செயற்பாட்டாளர்களைப் பொலிஸ் நிலையத்துக்குள் வருமாறு அழைத்த பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி குறித்த செய்தி அறிக்கையிடலில் ஈடுபட வேண்டாம் என்று
எச்சரித்ததுடன் வைத்தியர் அர்ச்சுனாவிடம் எந்தவொரு நேர்காணலும் எடுக்கக்கூடாது
என்றும் கூறியுள்ளார்.
மேலும், உத்தரவை மீறி நீங்கள் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டால் பொலிஸ் நிலையத்துக்கு
முன்பாக ஒன்றுகூடினீர்கள் என்று குற்றஞ்சாட்டி உங்களைச் சிறையில் அடைப்பேன்
என்று மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து
சென்றுள்ளனர்.
இவ்வாறு ஊடகவியலாளர்களைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
அச்சுறுத்தியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கடும் அதிருப்தியை
வெளிப்படுத்தியதுடன் ஊடக அமைப்புக்களிடமும் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.