பொத்துவில் அறுகம் குடா (Arugam Bay) பகுதியில் உள்ள இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா விசாவில் இருக்கும் போது வியாபாரம் அல்லது மதம் சார்பான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடுகின்றார்களா என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (29) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) இதனைக் கூறியுள்ளார்.
விடுமுறையில் சுற்றுலாப்பயணிகள்
சுற்றுலா விசாவில் சுற்றுலாப் பயணிகள் வியாபாரம், மதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கடந்த காலங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி, அறுகம் குடா பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளும் குறிப்பாக இஸ்ரேலியர்கள் சுற்றுலா விசாவில் உள்ளனர்.
விடுமுறையில் சுற்றுலாப்பயணிகள் ஏதேனும் வியாபாரம், மதம் அல்லது வேறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அது குறித்து முறைப்பாடு அளிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த செய்தி வெளிவருவதற்கு முன்னரே இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீன் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் இது பற்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.