கிழக்கில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசியல் கட்சியினர் போலி நாணயத்தாள்களுடன் வருவதாகவும், மக்களை அவதானமாக இருக்குமாறும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் காலத்தினையொட்டி பலவகையான வன்செயல்களை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் சந்திவெளியில் ஒரு அரசியல் கட்சியினர் அலுவலகம் ஒன்று திறக்க இருந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று அடாவடித்தனம் செய்து தாக்குதலை மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்நதன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பணம் மற்றும் மதுபானம் கொடுத்து வெற்றி பெற்றதைப் போன்று இந்த முறையும் பணம் கொடுப்பதற்காக போலியான நோட்டுக்களை அச்சடித்து விநியோகிக்க முயன்ற போது அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த முறை உங்களுக்கு தருகின்ற பணம் போலி நாணயத்தாளாக இருக்கலாம் எனவே மக்களாகிய நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
இவ்வாறானவர்களிடம் பணத்தைப் பெற்று நீங்களும் குற்றவாளியாகாமல் இருக்க வேண்டும்.
அத்துடன் இலஞ்சம் மற்றும் ஊழல் புரிபவர்களை நிராகரிக்க வேண்டும்.
அப்போது தான் தமிழரசுக் கட்சியின் திறமையானவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியும்.
கடந்த தேர்தலில் அபிவிருத்திக்காக நீங்கள் வாக்களித்து இரண்டு நபர்களை தெரிவு செய்தீர்கள். அவர்கள் இருவரும் ஊழல் வாதிகளுடன் இணைந்து இராஜாங்க அமைச்சுக்களை பெற்றிருந்த போதும் எந்த அபிவிருத்திகளையும் செய்யவில்லை.
அநுரகுமாரவின் ஆட்சியில் இந்த தேர்தலில் இவர்கள் வெற்றி பெற்றாலும் சிறைக்கு செல்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கும்“ என தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/WQRdqd828Fs