Home இலங்கை சமூகம் கடலில் காற்று சுழற்சிகள் உருவாகும் வாய்ப்பு! அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கடலில் காற்று சுழற்சிகள் உருவாகும் வாய்ப்பு! அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

0

“இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் நிலவிய காற்றுச் சுழற்சி வலுவிழந்தது.
ஆனால், இலங்கையின் தென்மேற்கு பகுதியைக் கொண்டு நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை
தொடர்ந்தும் காணப்படுகின்றது.

இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்
உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் மழை நாளை வரை நீடிக்கும்
வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவரும் காலநிலை
ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

 நிலச்சரிவு அனர்த்தம்

இதனால் நாளை வரை கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை மற்றும் பதுளை
மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு அனர்த்தம் நிகழ்வதற்கும்
வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பாக மக்கள் தொடர்ந்தும்
அவதானமாக இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல
பகுதிகளினதும் வளிமண்டலத்தில் ஈரப்பதன் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல இடங்களிலும் குளிரான
காலநிலை நிலவுகிறது. உணரக்கூடிய வெப்பநிலையும் குறைவாகவே உள்ளது. இது மேலும்
சில நாட்களுக்குத் தொடரும் வாய்ப்புள்ளது.

எனவே, குளிரான காலநிலை தொடர்பான
உணர்திறன் அதிகமுள்ளவர்கள் குறிப்பாக, வயதானவர்கள், நோயாளிகள் குழந்தைகள்
அவதானமாக இருப்பது சிறந்தது.

வெப்பநிலை அளவுகளில் நிலவும் சுவாரசியமான நிலைமை காணப்படுகின்றது.

அதிகூடிய வெப்பநிலை

கடந்த சில
நாட்களாக இரத்தினபுரி மாவட்டம் அதிகூடிய வெப்பநிலையை (சராசரியாக 31.5 பாகை
செல்சியஸ்) பெறும் அதேவேளை நுவரெலியா அதிகுறைந்த வெப்பநிலையைப் (சராசரியாக 16
பாகை செல்சியஸ்) பெறுகின்றது.

இரண்டு பிரதேசமும் மிகப்பெரிய அளவு தூர
இடைவெளியில் இல்லை. ஆனால் உயர வேறுபாடே மிகப்பெரிய வெப்பநிலை வேறுபாட்டை
ஏற்படுத்தியுள்ளது.

அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வாகவே
காணப்படுகின்றது. இது சராசரியாக 28 பாகை செல்சியஸ் என்ற அளவில்
காணப்படுகின்றது.

காற்றுச்சுழற்சிகள் உருவாகும் வாய்ப்பு

பொதுவாக கடல் மேற்பரப்பு வெப்பநிலை 27 பாகை செல்சியஸை விட
உயர்வாக இருந்தாலே கடலில் காற்றுச் சுழற்சிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் புதிய ஒரு காற்றுச் சுழற்சி
உருவாகும் வாய்ப்புள்ளது.

எனினும் இதனை அடுத்த சில நாட்களுக்கு பின்பே
உறுதிப்படுத்த முடியும்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை
மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.” – என்றும் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version