மீதொட்டமுல்ல கப்பம் கோரல் சம்பவம் தொடர்பான வழக்கில் கொழும்பு மேல்
நீதிமன்றம் விதித்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து, மஹிந்த
அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தாக்கல் செய்த
மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் மீளப்
பெற்றுள்ளார்.
பிரசன்ன ரணதுங்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த 25 மில்லியன் ரூபாய்
அபராதத்துடன் சேர்த்து ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் நடைமுறையில் உள்ளது.
இந்தநிலையில், அந்த அபராதத்தை தவணை அடிப்படையில் செலுத்த நீதிமன்றம் அவருக்கு
அனுமதி அளித்தது.
பதின்மூன்றாவது சந்தேகநபர்
மேன்முறையீட்டு மனு நீதியரசர் மாயாதுன்னே கொரயா தலைமையிலான மேன்முறையீட்டு
நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது,
பிரசன்ன ரணதுங்கவின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி மனுவை மீள பெற அனுமதி
கோரினார்.
2015ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை தொலைபேசியில் அச்சுறுத்தி 64 மில்லியன்
ரூபாய் கோரியதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் பதின்மூன்றாவது
சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ரணதுங்க குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம்
ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.
அதன்படி, அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், ரூ.25 மில்லியன் அபராதம் செலுத்த
நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.
