Home ஏனையவை வாழ்க்கைமுறை யாழில் இடம்பெற்ற “பேறுகால உளநலம்” நூல் வெளியீடு

யாழில் இடம்பெற்ற “பேறுகால உளநலம்” நூல் வெளியீடு

0

உலக மகப்பேற்றுக்கால உளநல வாரம் மே 05 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. 

நிறைவு நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை பேறுகால உளநலம் என்கிற கருப்பொருளை மையப்படுத்திய விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. 

யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமாகிய குறித்த பேரணி யாழ் நூல் நிலையத்தை வந்தடைந்து நிறைவுற்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் உளநலப் பிரிவான அரும்புகள் அமைப்பு குறித்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. 

பேறுகால உளநலம்

பேரணியை தொடர்ந்து யாழ் நூல் நிலையத்தின் கேட்கோர் கூடத்தில் நிகழ்வுகளும் நடைபெற்றன. இந் நிகழ்வில் தமிழர் பொருண்மியம் ஆசிரியர் ஞானரூபன் கவி பிரதம விருந்தினராகவும், மூத்த உளவளத் துணையாளர் கோகிலா மகேந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். 

வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்த நிகழ்வு பேறுகாலத்தில் தாய்மார்களின் உளநல மேம்பாட்டினை பற்றிய புரிதலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. 

பேறுகால உளநலம் சார்ந்து பல்வேறு கோணங்களில் பலர் உரையாற்றியிருந்தனர். “பேசாததை பேசுவோம்” என்றும் தலைப்பில் இடம்பெற்ற கருத்தமர்வில் வைத்தியர் திருமதி சுகந்தி நவநீதன் குடும்ப வன்முறை தொடர்பாகவும், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சரவணகுணாளன் பத்மினி “சமூக மட்டத்தில் பேறுகால உளநலம்” தொடர்பாகவும், சுகாதார வைத்திய அதிகாரி பிறிந்திகா செந்தூரன் “பேறுகால உளநலம் தொடர்பான பொதுமக்களின் நிலைப்பாடுகள்” குறித்தும் யாழ் பல்கலைக்கழக மெய்யியல்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர், அபிராமி ராஜ்குமார் “பெண்களுடைய உளநலம்” தொடர்பாகவும், உள மருத்துவர் கலைச்செல்வி பொன்னுராஜ் “சிறுபிள்ளைப் பராயத்தின் உளநலம்” குறித்தும் உரையாற்றியருந்தார்கள்.

இந் நிகழ்வில் உளமருத்துவ நிபுணர் எஸ்.சிவதாஸ் எழுதிய “பேறுகால உளநலம்” எனும் நூல் வெளியீடும் இடம்பெற்றது. 

முள்ளிவாய்க்கால் வாரத்தில் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டில் முதல் பிரதியை 2009 இன் இறுதி யுத்த காலப்பகுதியில் பதுங்கு குழியினுள் தனது குழந்தையை பிரவித்த தாயொருவர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/prenatal-mental-health-book-launch-held-in-jaffna-1747052633

NO COMMENTS

Exit mobile version