ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், சட்டமா அதிபருக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று(06.01.2025) நடைபெறவுள்ளது.
தற்போதைக்கு நடைபெற்று வரும் முக்கிய வழக்குகள் குறித்தே இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஆட்சிக்காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட வழக்கு
இதேவேளை, குற்ற வழக்குகளை பராமரிப்பதில் ஏற்படும் சிரமங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர் சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த செப்டம்பரில் ஒரு சந்திப்பு நிகழ்ந்திருந்தது.
அந்தச் சந்திப்பின் பின்னர் மஹர சிறைச்சாலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை கைவிடுவதாக சட்ட மா அதிபர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.