நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகள், வடிகாண்கள் மற்றும் பாதுகாப்பு மதில் சுவர்களை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுடன் இன்று (08.12.2025) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இவ்வாண்டு இறுதிக்குள் அனைத்து புனரமைப்பு நடவடிக்கைகளையும் நிறைவு செய்யுமாறும் இதன்போது ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
வீதி புனரமைப்பு
டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து வீதிகள் மற்றும் அவற்றை புனரமைக்க எடுக்கும் காலம் தொடர்பில் ஆராயப்பட்ட போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாதாரண பழுதுபார்ப்பு மேற்கொண்டு திறக்க முடியாத வீதிகள் தொடர்பில் அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, இது தொடர்பாக அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரினார்.
நுவரெலியா மாவட்டத்தில் சில வீதிகள் மற்றும் பாலங்களை அமைக்கும் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளை கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
