பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கையை நிலைநிறுத்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதற்கும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்தித குமநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, நேற்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச இயந்திரத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்
தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர கால நிலை சட்டத்தின் படி அதிக அதிகாரங்கள் அரச இயந்திரத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தத்தின் போது நாட்டின் சாதாரண நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படுவதை தடுத்து நிறுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரங்களை பயன்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள அமைப்பதே இதன் நோக்கம் என ஜனாதிபதியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அவரசகால சேவைகள் வருமாறு,
மின்சாரம் வழங்கல் தொடர்பான சேவைகள்,
எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் கொண்டு செல்லல்,
வைத்தியசாலைகள், வைத்திய சேவைகள் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் பணியில்,
போக்குவரத்து மற்றும் பொருட்கள் கொண்டு செல்லல்,
நீர் வழங்கல் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளும்,
அத்தியாவசிய சேவைகள் வழங்கல் மற்றும் அது தொடர்பான அனைத்தும்.
