அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25) முற்பகல் விவசாய மற்றும் வர்த்தக அமைச்சுகள் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் குழுவினரை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
மேலும், அரிசி விலை மற்றும் அது தொடர்பான தற்போதைய நிலவரங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரிசி தட்டுப்பாடு
இதேவேளை, கடந்த 23 ஆம் திகதி திருகோணமலையில் வைத்து, கடைகளில் அரிசி தட்டுப்பாடு இருந்தாலும் நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை என்றும் போதுமான அளவில் அரிசி கையிருப்பு இருக்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அத்தோடு, உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்து, அதன் மூலமாக நாட்டு மக்களுக்கு அரிசியை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அங்கு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.