Home முக்கியச் செய்திகள் இலங்கை அரசியலின் புதிய திருப்பம் – அநுர நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பு

இலங்கை அரசியலின் புதிய திருப்பம் – அநுர நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பு

0

இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றது என புதிதாக ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகி உள்ளதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறு

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது.

அதற்காக என்னால் உங்களுக்கு நன்றி கூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும்.

இது எம்மனைவரதும் வெற்றியாகும். நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம் செய்துள்ளார்கள்.

எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம்.   

புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும்

எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன.

இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுத வேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன. கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும்.

சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்று சேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன் மீது தான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும்.

வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம் என புதிய ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version