Courtesy: Sivaa Mayuri
அரச அதிகாரிகளை ஊடகங்களின் கேள்விகளுக்கு உட்படுத்த அனுமதிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மாறாக, அரச அதிகாரிகளின் கௌரவத்தை நிலைநிறுத்தி அவர்களின் அர்ப்பணிப்பை பொதுமக்களுக்கு பெற்று கொடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திறமையான, குடிமக்களை மையமாகக் கொண்ட பொதுச் சேவையை உருவாக்குவதில் தங்களை அர்ப்பணித்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு தாம் ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்கள்
அதேநேரம், கடந்த ஆட்சியில் இருந்ததைப் போலன்றி, மக்கள் நலனுக்காக செயற்படும் அரசு அதிகாரிகள் இனி அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக நேற்று பதவியேற்றதன் பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், பழைய அரசியல் கலாசாரத்தை நிராகரித்து புதிய அரசியல் திசையில் பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.