யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் தாக்குதலுக்கு
இலக்காகி கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில், யாழ். போதனா
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரி ஊடக
சந்திப்பொன்றை நடத்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் குறித்த கைதி மீது தாக்குதல்
நடத்தப்படவில்லை எனவும்
கீழே விழுந்து தலையில் காயப்பட்டதற்காகவே
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
முதல் கட்ட விசாரணையின் போது யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகம் அதனை
மறுத்துள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலை
குறித்த கைதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு
கொண்டு வரப்படும் போதே உடல் சோர்வுற்று இருந்ததாகவும், இந்நிலையில் கீழே
விழுந்ததாகவும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வைத்தியர்
சிகிச்சை அளித்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டார்.
அங்கு ஒரு நாள் சிகிச்சைக்கு பின்னர் மீள சிறைச்சாலைக்கு
கொண்டு வரப்பட்ட நிலையில் மீண்டும் உடல் இயலாமை ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் – என சிறைச்சாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
இதேவேளை குறித்த கைதியின் உடலில் தாக்கப்பட்டதற்கான அடி காயங்கள் இல்லை என
வைத்தியர்கள் தம்மிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலக இணைப்பாளர் த.கனகராஜ், தற்போதைய
நிலையில் குறித்த கைதி பேச முடியாத நிலையில் இருப்பதால்,
குறித்த நபர் முதல் தடவை வைத்தியசாலையில் கொடுத்த வாக்குமூலம் தொடர்பில்
ஆராயவுள்ளதாக தெரிவித்தார்.
