தனியார் பேருந்தை மறித்து அதன் சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் மற்றொரு
தனியார் பேருந்தின் சாரதிக்கு ஒரு மாத காலம் தற்காலிக பணி இடைநிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு
மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரனால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறிப்பிட்ட சாரதி பயணித்த பேருந்தின் உரிமையாளருக்கு கடந்த 24ஆம் திகதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை தண்டனை
துணுக்காய் – யாழ்ப்பாணம் வழித்தடத்தில் கடந்த 5ஆம் திகதி பயணித்த தனியார்
பேருந்தை வழிமறித்து நிறுத்தி, அந்தப் பேருந்தின் சாரதியை இருக்கையில் வைத்து
தாக்கி அச்சுறுத்தியதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார
சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.
அதற்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குற்றம்
நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்து, மேற்படி தாக்குதலை நடத்திய சாரதிக்கு
முன்னெச்சரிக்கை தண்டனையாக நேற்று 28ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு
தற்காலிக பணி இடைநிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்படி சாரதிக்கு எதிராக மீண்டும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால்
அவர் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படாது என்பதுடன்
பேருந்தின் உரிமையாளருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு
மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன்
எச்சரித்துள்ளார்.