மட்டக்களப்பில் (Batticaloa) தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகு வைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக
சென்ற நபரை குறித்த தனியார் நிதி நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர்
தகாத வார்த்தைப் பிரயோகம் செய்து தாக்குவதற்கு முயன்றுள்ளதாக பொலிஸில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர் தெரிவிக்கையில், எமது தேவைகளுக்காக தம்மிடமிருந்த தங்க ஆபரணங்களை களுவாஞ்சிகுடி பகுதியில்
அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் 19 இலட்சம் ரூபாவுக்கு அடகு
வைத்திருந்தோம்.
பின்னர் அதனை மீட்பதற்கு வெள்ளிக்கிழமை (03.01.2025) அன்று ஒரு
மணியளவில் நாம் பணத்துடன் உரிய நிறுவனத்திற்குச் சென்று வட்டியும் முதலுமாக
கணக்குப் பார்த்த போது 20 இலட்சம் ரூபாய் மொத்த தொகையாக கூறினார்கள்.
நாம் 20 இலட்சம் ரூபாய் காசு கொண்டு வந்துள்ளோம் எமது நகைகளை தருமாறு
கோரினோம்.
தகாத வார்த்தை பிரயோகம்
இப்போது உங்களது நகைகள் தரமுடியாது ஏன் அவசரமாக மீட்கப்
போகின்றீர்கள் இன்னும் இரு நாட்களுக்கு இருக்கட்டும் திங்கட்கிழமை தருகின்றோம்
என கூறினர். இல்லை எமக்கு அவசரமாக எமது ஆபரணங்கள் தேவை, உங்களுடைய வட்டியும்
முதலுமாக கொண்டு வந்திருக்கின்றோம் என கூறியும் அவர்கள் எமது நகைகளை தர
மறுத்துவிட்டார்கள்.
பின்னர் நாம் எமது வீட்டிற்கு சென்று விட்டோம்.
மீண்டும் அன்றையதினம் 2 மணியளவில் போய் நாம் தங்களிடம் அடகு வைத்த ஆபரணங்களை
மீட்பதற்காக வந்துள்ளோம்.
எம்மிடமுள்ள நிதியை தாங்கள் பெற்று விட்டு எமது
ஆபரணங்களை தருமாறு கோரிய போதும் அந்த நிதி நிறுவனத்தில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தை பிரயோகம் செய்து எம்மைத் தாக்க
முயன்றார்.
இவ்விடயம் தொடர்பில் நாம் களுவாஞ்சிகுடி பொலிவில் முறைப்பாடு செய்துள்ளோம் என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த நிதி நிறுவனத்தில் கடையாற்றும் உத்தியோகத்தர்கள் தமக்கு
மாத்திரமின்றி இன்னும் பலருக்கு இவ்வாறு செய்துள்ளதாகவும், எம்முடைய தங்க
நகைகள் அவர்களிடத்தில் இன்னும் சில நாட்களுக்கு இருக்குமாக இருந்தால் வட்டிக்
காசு அதிகரிக்கும் என்னும் நோக்கத்திலேயே தான் அவர்கள் இவ்வாறு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.