Home முக்கியச் செய்திகள் மோசமான கொடிய பயங்கரவாத தடைச்சட்டம்… சிங்கள அமைச்சரே ஐ.நாவில் ஏற்றுக் கொண்ட உண்மை…

மோசமான கொடிய பயங்கரவாத தடைச்சட்டம்… சிங்கள அமைச்சரே ஐ.நாவில் ஏற்றுக் கொண்ட உண்மை…

0

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி இனவழிப்ப செய்ய உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இன்றுவரை அதன் கோரக் கரங்களை நீட்டி எச்சரித்தபடி இருக்கிறது.

அப்பாவிகளின் கருத்துச் சுதந்திரத்தை கலை வெளிப்பாடுகளை, வாழ்வியல் முறைகளை என எல்லாவற்றையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்படியாக 45 ஆண்டுகளாக இந்த சட்டம் நடைமுறையில் இருக்கின்றது.

அதிலும் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகளாகவும் இச் சட்டம் நடைமுறையில் இருப்பதும் மற்றொரு விடயமாகும். ஒரு தற்காலிக ஏற்பாடாக கொண்டுவரப்பட்ட சட்டம் சுமார் அரை நூற்றாண்டை அண்மிக்கும் வரையில் நடைமுறையில் இருந்து ஈழத் தமிழ் இனத்தை அச்சுறுத்திக் கொண்டிருப்பதன் பின்னணி மிகவும் பயங்கரமானதாகும்.

சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம்

ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பெரும் எழுச்சி கொண்டிராத காலப் பகுதியாக எழுபதுகளின் இறுதியை கருதலாம்.

தனிச்சிங்கள சட்டம் அதனை தொரடந்து முன்னெடுத்த இனப்படுகொலைகளும் தனி ஈழமே தீர்வு என்ற நிலைக்கு தமிழர்களை தள்ளிய காலத்தில் குறிப்பாக தமிழ் இளைஞர்களை கபளீகரம் செய்கிற நோக்கில் சிங்கள அரசால் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது.

1979ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் நாள் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் 48ஆவது இலக்க பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அதுவே இன்றைக்கு 45 ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழித்து வருகிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த காலத்தில்  ஒருமுறை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியிருந்தார்.

எமர்சன் வருகை தந்த காலத்தில் நடைமுறையில் இருந்த ரணில் – மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் கொடுமையானது என்பதை பகிரங்கமாக ஏற்றிருந்தது.

பயங்கரவாதத் சட்டம் என்றால் என்ன?

இது உதிரத்தை உறைய வைக்கும் மனதை நடுங்கச் செய்யும் விரிவாக இருக்கலாம். பயங்கரவாத விசாரணைப் பிரிவு, காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு கைது செய்தல், விசாரணை செய்தல், ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளல் என்பவை தொடர்பில் பரந்தளவிலான அதிகாரத்தை பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிமுறை வழங்குகிறது.

சந்தேகத்தின் அடிப்படையிலேனும் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க முடியும். விசாரணைக்காக நபர் ஒருவரை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்கின்ற நிலையில் நீதிமன்ற வழிநடத்தல் இன்றி சொத்துக்களை முடக்க முடியும். சந்தேக நபரை தடுத்து வைப்பதன் கால எல்லையை 18 மாதங்களாக நீடிக்க முடியும்.

எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் ஒருவர் வழக்கு விசாரணை முடியும் வரை கால வரையரையின்றி தடுத்து வைக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது.

கைதாகி சிறையில் உள்ளபோது பாரிய மற்றும் கீழ்த்தரமான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன.

நீதிமன்றங்களினாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்த அதிகாரம் இல்லாமல் அந்த நடவடிக்கைக்கு இணக்கம் செய்யும் நிலையுமே நடைமுறையில் உள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனமாகவே கருகிறது. சிறுபான்மை தமிழ் இன மக்களுக்கான நீதியை மறுத்து அவர்கள்மீதான மனித உரிமை மீறலை நியாயப்படுத்தி எதையும் செய்யும் அதிகாரத்தை இச் சட்டம் வழங்குகிறது.

ஏன் கொண்டுவரப்பட்டது இச்சட்டம்?

தமிழ் மக்கள்மீது இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு முந்தைய காலங்களில் அரசின் மூலம் உத்தியோக பூர்வமற்ற முறையில் இனக் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன.

பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்த தீவின் சிறுபான்மைத் தமிழ் இன மக்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அழிக்கும் உத்தியோகபூர்வ முறையை அல்லது அதிகாரத்தை அரச எந்திரம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கும் இனவாதிகளுக்கும் கையளித்தது.

ஒடுக்குமுறைக்கு உள்ளான ஈழத் தமிழ் மக்கள் தனி நாடு ஒன்றிலேயே சுதந்திரமாக வாழ இயலும் என்றும் அது தமிழீழம் என்ற நாட்டிலேயே சாத்தியமாகும் என்றும் முடிவுக்கு ஈழத் தமிழ் மக்கள் தீர்மானம் எடுக்க அடிப்படையாக இருந்த காரணங்களில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஒன்றாகும்.

பயங்கரவாத தடைச் சட்டம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் கடந்த 45 வருடங்களாக பெரும் இன ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகின்றனர்.

தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் எவரும் எந்த நேரத்திலும் எந்தக் காரணத்தைக் கூறியேனும் கைது செய்யப்படலாம் என்றும் அவருக்கு என்ன நேர்ந்தாலும் அதனைக் குறித்து கேட்க இடமில்லை என்ற நிலையும் காணப்பட்டது.

இது தமிழ் மக்களின் அரசு அல்ல என்பதையும் இது தமிழ் மக்களை ஒடுக்கி அழிக்கும் அரசு என்பதையும் தமிழ் மக்கள் தமக்கான பாதுகாப்பை தமிழ் அரசு ஒன்றின் ஊடாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற யதார்த்தத்தையும் இச்சட்டத்தின் நடைமுறைகள் ஈழத் தமிழ் இனத்திற்கு உணர்த்தி நின்றன.

காற்றில் பறந்த வாக்குறுதி

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், இதுவரை அதற்கான உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கடந்த காலத்தில் கூறியதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை பயங்கரதவாத தடைச்சட்டம் மிகவும் மோசமான கொடிய சட்டம் என்று இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா மன்றத்தில் வைத்து ஏற்றுக் கொண்ட ஒப்புதல் வாக்குமூலம் மிகவும் முக்கியமானது.  

பயங்கரவாத சட்டம் உருவாக்கப்பட்டு 45 ஆண்டுகள் என்றால் “பயங்கரவாத சட்டத்தை நீக்கு” என்று தமிழ் மக்கள் குரல் எழுப்பியும் 45 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இச் சட்டத்தால் பல ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் பிள்ளைகளை, தாய், தந்தையரை இழந்துபோயுள்ளனர். கைதகளின் உறவுகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். சிறையில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

எல்லாப் போராட்டங்களும் தீர்வின்றி முடக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் சட்டமும் அதனை கொண்டு கைதுசெய்யப்பட்டவர்களும் கொஞ்சமும் மனித நேயமற்ற முறையில் தென்னிலங்கையில் ஆளும் எதிர்கட்சிகளின் அரசியல் முதலீடுகளாக ஆகியிருப்பதே இத் தீவின் பெரும் துயரமாகும்.

புதிய சட்டமா?

பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்தி வருவதாக தற்போதைய அரசின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடந்த காலத்தில் கூறினார்.

ஆக இலங்கை அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை நீக்கப் போவதில்லை என்று முன்னரே அறிவித்திருந்தது.

தமிழ் மக்களை தொடர்ந்தும் ஒடுக்கி ஆளும் ஒரு அரசு, அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழாமல் தடுத்து ஒடுக்க இந்தச் சட்டம் தேவை என்று கருதுவதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை எப்படியோ நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு புதிய வடிவம் கொடுத்து அதனை தொடர்ந்தும் தீவிரப்படுத்த முனைவதே இங்கு ஈழத் தமிழ் இனம் சந்திக்கப் போகும் ஆபத்தாகும்.

அத்துடன் சர்வதேசத்தின் நன்கொடைகளைப் பெறவும் பொருளதார நெருக்கடிகளில் இருந்து விடுபடவும்

ஈழத் தமிழர்களின் தனிநாட்டு உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் சட்டத்தையே இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று அழைக்கிறது.  

தமிழ் மக்களின் சுய உரிமையை அவர்களிடமே கையளித்தல், அவர்களின் தாயகப் பிரதேசத்தில் அவர்களே ஆட்சி புரிதல், அவர்களின் தாயகத்தை அபகரிக்காது விடுதல், அவர்கள் மீதான இன ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புச் செயல்களை நிறுத்திக் கொள்ளல் என்பனவற்றை மேற்கொள்ளாமல் எந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் தமிழர்களின் இன உரிமைப் போராட்டத்தின் பயணத்தை தடுக்க இயலாது.

மாறாக ஈழ விடுதலைப் போராட்டத்தை அது நியாயப்படுத்தவே செய்யும்.

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் இனவழிப்பு நிறுத்தப்படாதிருக்கையில் இனவிடுதலைக்கான போராட்டமும் தொடர்ந்தபடியே இருக்கிறது.

அதற்கான நிர்பந்தத்தை இலங்கை அரசே உருவாக்குகிறது என்பதே இங்கு மெய்யான நிலையாகும். 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு,
15 July, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–


இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

NO COMMENTS

Exit mobile version