Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் இறால் வளர்ப்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் இறால் வளர்ப்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு

0

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரை பிரதேச சமூக மட்ட அமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (12) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபரின் பணிப்புரை

இறால் வளர்ப்பு திட்டத்திற்கு பயனாளிகளை தெரிவு செய்யும் நேர்முக தேர்வு இன்று காலை உதவி மாவட்ட செயலாளர் தலைமையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்று வரும் வேளையில் போராட்டக்காரர்கள் பிரதேச செயலகத்திற்குள் சென்று தங்களது பிரதேசத்தின் வளங்களை அழிக்கும் செயற்திட்டங்கள் தமக்கு வேண்டாம் எனவும் குறித்த திட்டங்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், உதவி மாவட்ட செயலாளர் தான் அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு கீழ் வருகை தந்ததாகவும், கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைவாக இப் பயனாளிகளை தெரிவு செய்யும் திட்டம் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பிரதேச செயலகத்தின் நுழைவாயிலில் பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது போராட்டக்காரர்களினால் அபிவிருத்தி எனும் போர்வையில் வளங்களை அழிக்காதே, வாகரை மக்களின் வாழ்வாதாரத்தினை அழிக்காதே, அழிவுகரமான இறால் வளர்ப்பை நிறுத்துங்கள், ஆளுநரே மக்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள் போன்ற கோசங்களை முன் வைத்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version