பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் (ceylon workers congress) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று (19.04.2024) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு அரசாங்கம் கம்பனிகளிடம் கோரிக்கை விடுத்துடன், அமைச்சரவையிலும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
என்றாலும், கம்பனிகள் 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென தொடர்ச்சியாக கூறிவருவதுடன், அரசாங்கத்தின் தீர்மானத்தையும் ஏற்க மறுத்து வருகின்றன.
சம்பள விடயத்தில் இழுத்தடிப்பு
இதுதொடர்பில் தொழில் அமைச்சு, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் இ.தொ.காவிற்கும் இடையில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுகளும் தோல்வியிலேயே முடிந்தன.
இதன் காரணமாகவே கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இ.தொ.கா முன்னெடுத்துள்ளது.
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணிக்காதீர், சம்பள விடயத்தில் இழுத்தடிப்பு வேண்டாம், அராஜக கம்பனிகளே தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை கொடு இல்லாவிட்டால் தோட்டங்களை விட்டு வெளியேறு போன்ற பல்வேறு சுலோகங்களை காட்சிப்படுத்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் இந்தப் போராட்டம் ஏற்பாடும் செய்யப்பட்டதுடன், பெருமளவான தொழிலாளர்களும், ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |