முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம், இன்றையதினம்(03.01.2024) காலை 7.30 மணியளவில் பாடசாலை நுழைவாயிலில் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர், கல்லூரியின்
வளர்ச்சியை சீர்குலைப்பதாகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக
இருப்பதாகவும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் போராட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
அதிபரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள்
மேலும், குறித்த பாடசாலை அதிபரின் மீது, 14 ஆசிரியர்களுக்கு அண்மையில் அவர்களுக்கான பதிலீடு இன்றி, தனிப்பட்ட பழிவாங்கல் நோக்கில், இடமாற்றத்திற்கு சிபாரிசு செய்தமை மற்றும் அவரது பொறுப்பற்ற வார்தை பிரயோகங்கள் போன்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பாடசாலையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை 83இலிருந்து 63ஆக வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலையில் கடமையாற்றும் ஏனைய ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு பாடசாலையின் அகச்சூழல் சீரின்றியும், பாதுகாப்பின்றியும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயங்கள் தொடர்பாக அதிபருடன் பல தடவைகள் இணைந்து நடத்திய கலந்துரையாடல்களில் மேற்கொண்ட தீர்மானங்கள், ஆலோசனைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல், அதிபரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் மாணவர் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்திற்கான காரணம் தொடர்பான மனு
குறிப்பாக உயர்தர மாணவர்களுக்கு சில பாடங்களுக்கு பொருத்தமான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. பல பாட வேளைகளில் வகுப்புகள்
நடைபெறுவதில்லை.
இவ்வாறான காரணங்களாளேயே போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, போராட்ட இடத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் குறித்த போராட்டத்திற்கான காரணங்களை கேட்டறிந்திருந்தார்.
அதன்பின்னர், போராட்டத்திற்கான காரணம் தொடர்பான மனு அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கல்வி அமைச்சின் செயலாளருக்கு இந்த மனுவை அனுப்புவதாகவும், அதன் பிரதியை சம்பந்தப்பட்ட அரச அலுவலகங்களுக்கு வழங்கி இதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்திருந்தார்.