மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
இலுப்பைகடவை பகுதியிலுள்ள சோழமண்டல குளம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின்
காணியை நூறு ஏழை விவசாயிகளுக்கு வழங்க கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, நேற்றைய தினம் (10) பாதிக்கப்பட்ட விவசாயிகளால் கடும் மழைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
இலுப்பைக்கடவை பகுதியிலுள்ள சோழமண்டல குளம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின்
காணியில் கடந்த 30 ஆண்டுகளாக நூறு ஏழை விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபட்டு
வருகின்றனர்.
நீண்ட கால கோரிக்கை
இவர்களுக்கு காணிக்குறிய ஆவணத்தை வழங்காமல் வெளிமாவட்டத்தை
சேர்ந்தவர்களுக்கு காணி வழங்கியுள்ளதால் உள்ளூர் ஏழை விவசாயிகள் வாழ்வாதாரம்
மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இக்காணி விடயம் தொடர்பாக பல வருடங்களாக பல கூட்டங்கள் நடத்தியும்
கடிதங்கள் எழுதியும் பெயர் பட்டியல்கள் தயாரித்து முறைப்படி பிரதேச செயலாளரால்
வழங்கியும் பயன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இறுதியாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானத்திற்கு அமைவாக 250 ஏக்கர் காணியில் 200 ஏக்கர் காணியை 100
விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் வீதமும் மீதி 50 ஏக்கர் காணியை வெளி
மாவட்டத்தைச் சேர்ந்த 10 நபர்களுக்கும் பிரித்து வழங்குவது என
தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்க
மறுக்கின்றது. காலபோகம் பயிர்ச்செய்கை குரியகாலம் தொடங்கியுள்ளதால் உடனடியாக
இந்த காணியை பிரித்து வழங்க வேண்டியது அவசியமாகும்.
ஜனாதிபதிக்கு கடிதம்
இது நீண்ட காலமாக தொடர் நடவடிக்கையில் இருந்த விடயம் என்பதால் தேர்தல்
திணைக்களம் இலகுவாகவே அனுமதி வழங்க முடியும். ஆகவே, விவசாயிகளின் நலனை
கருத்திற்கொண்டு தாங்கள் இவ்விடயத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்ட ஏழை
விவசாயிகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைத்துள்ளனர்.
அதேவேளை, போராட்டத்தின் போது, மக்கள் ”தேர்தல் திணைக்களமே ஏழைகளின் எதிரியா? அரச அதிகாரிகளே காணி மாபியாக்களின் கூட்டாளிகளா? ஏழை விவசாயிகளை ஏமாற்றாதீர்கள்” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு சென்ற மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
க.கனகேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எழுதிய கடிதத்தை அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர்.
மேலும், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இலுப்பைக் கடவையில் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த போராட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் கலந்து கொண்டுள்ளார்.