நுவரெலியாவில் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, தோட்டத்தொழிலாளர் மத்திய நிலையம் மற்றும் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்ட ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வார்ப்பாட்ட பேரணி நேற்று காலை 10 மணிக்கு காமினி தேசிய பாடசாலைக்கு
அருகில் ஆரம்பமாகி நுவரெலியா – பதுளை வீதி வழியாக நுவரெலியா தர்மபால
சந்தியினூடாக நுவரெலியா பிரதான பாதையில் எலிசபெத் வீதி, லோசன் வீதி, புதியகடை
வீதி வழியாக நுவரெலியா விக்டோரியா பூங்காவிலுள்ள மாநகரசபை பொது நூலகத்தில்
பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஏந்தியிருந்த சுலோகங்கள்
இந்த பேரணியில் கலந்து கொண்ட பொது மக்கள்
“மலையக தமிழ் மக்களின் காணி உரிமை மற்றும் வீட்டுரிமையை உறுதி செய்”, “தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒற்றிற்கு அடிப்படை சம்பளமாக 2000 ரூபா
வழங்கு”, “தோட்டத்தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கு” போன்ற கோரிக்கைகள்
எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.
இக்கோரிக்கைகள் உட்பட பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமை சார்ந்த ஏனைய
விடயங்களை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தே
இந்த ஆர்ப்பாட்ட பேரணியும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி உவா மாகாணத்தில்
கொஸ்லந்தை மீரியபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவின் காரணமாக 39
உயிர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து, இதனை நினைவு கூறும் முகமாகவே இந்த
ஆர்ப்பாட்ட பேரணியும் கூட்டமும் நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மலையகத்தமிழர்களின் நிலை
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகையில், நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றும் மலையகத் தமிழர்களாகிய நாம்
மிகவும் வசதி குறைந்த வாழ்வதற்கு பொருத்தம் இல்லாத வரிசை வீடுகளில்
வாழ்கிறோம், நிலச்சரிவுக்கான அறிகுறிகள் முன்கூட்டியே காட்டினாலும் “அவர்கள்”
இலங்கை நாட்டவர்கள் இல்லை, அதனால் நாம் ஏன் அவர்களை கவனிக்க வேண்டும் என்ற
கருத்தியலின் தாக்கம் அதிகாரிகளையும் அரசாங்கத்தையும் பாதித்திருக்கலாம்.
39 உயிர்கள் மண்ணில் புதையுண்டு சொன்ன செய்தியாக நாம் பார்ப்பது எமது
உறவுகளுக்காவது பாதுகாப்பான வீட்டு, காணி உரிமையை வழங்குங்கள் எங்களைப்
போன்று அவர்களையும் புதைத்து விடாதீர்கள் என்றே, அக்டோபர் 29ஆம் திகதி மலையக
தமிழ் மக்களின் வீட்டு காணி உரிமை தினத்தை நினைவு கூறுகின்றோம் என குறிப்பிட்டுள்ளனர்.
