Home முக்கியச் செய்திகள் மன்னார் சிந்துஜா, வேனுஜா மரணத்திற்கு நீதி கோரிய போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது

மன்னார் சிந்துஜா, வேனுஜா மரணத்திற்கு நீதி கோரிய போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது

0

மன்னார் (Mannar) பொது வைத்தியசாலையில் மகப்பேற்று சிகிச்சைகளின் போது
மரணமடைந்த சிந்துஜா, பட்டித்தோட்டத்தை சேர்ந்த வேனுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி முன்னெடுத்த போராட்டத்தில் பொது மக்கள் சார்பாக
முன்னின்று போராடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (08.06.2024) மன்னார் காவல்துறையினரால் குறித்த மூவரும் கைது
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது, சட்டவிரோதமாக பொது மக்களை ஒன்று கூட்டியமை மற்றும் பொது சொத்துக்களை
சேதப்படுத்தியமை உள்ளட்ட பல பிரிவுகளில் சம்மந்தப்பட்ட மூன்று இளைஞர்களும்
கைது செய்யப்பட்டு காவல்துறை காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 அமைதியான போராட்டம் 

கடந்த டிசம்பர் மாதம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக பொது அழைப்பின்
பெயரில் ஒன்று கூடிய பொது மக்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெறும்
பல்வேறு சீர்கேடுகளுக்கு எதிராக அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகள்
அதிகாரிகளால் வழங்கப்பட்ட போதிலும் அதை ஏற்க மறுத்த சில போராட்டகாரர்களால்
போராட்டம் வன்முறையாக மாற்றம் அடைந்தது.

இந்த நிலையில் வீதிகளை மறித்தும் டயர்களை கொழுத்தியும் போராட்டகாரர்கள் சிலர்
தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்த நிலையில் போராட்டத்தில் சில விசமிகள் புகுந்து காவல்துறையினர்ர் மீதும் வைத்தியசாலை மீதும் கல் வீச்சுக்களை மேற்கொண்டு போராட்டத்தை
திசை திருப்பியிருந்தனர்.

காவல்துறையினரால் மூவர் கைது

இவ்வாறான நிலையில் போராட்டம் இறுதியில் சுமூகமான நிலையில் நிறைவடைந்த போதிலும்
மக்கள் சார்பாக போராட்டத்தில் கலந்து கொண்ட மூவரை பல மாதங்கள் கழித்து மன்னார் காவல்துறையினர் இன்றையதினம் கைது செய்துள்ளனர்.

சிந்துஜா மற்றும் வேனுஜாவின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் இது வரை
முடிவுறுத்தப்படாத நிலையில் அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு நீதி
கிடைக்காத நிலையில் அவர்கள் சார்பாக போராடிய மூவர் காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version