சர்வதேச நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மாபெரும் போராட்ட பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் (jaffna) வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த மாபெரும் போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பேரணியானது யாழ்ப்பாணம் – ஆரியகுளம் சந்தியில் இன்று (30.8.2024) காலை 11 மணியளவில் ஆரம்பமாகி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி – காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்துள்ளது.
வலி சுமந்த கண்
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கைகளில் தீச்சட்டி ஏந்தியவாறு வலி சுமந்த கண்களுடன் பேரணியில் பங்கேற்றிருந்தனர்.
இப்பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர்,
அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை
இதேவேளை, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் மீண்டும் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.