Home இலங்கை அரசியல் மாகாண சபை தேர்தல்: எல்லை நிர்ணயத்தை ஆராய்ந்தால் மீண்டும் இழுபறி ஏற்படும் – சஜித் அணி

மாகாண சபை தேர்தல்: எல்லை நிர்ணயத்தை ஆராய்ந்தால் மீண்டும் இழுபறி ஏற்படும் – சஜித் அணி

0

”இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு
அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய தேர்தல் முறையில் தேர்தலை நடத்த
அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். எல்லை
நிர்ணயம் குறித்து கவனம் செலுத்தினால் மீண்டும் இழுபறிநிலை ஏற்படும் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்ததுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து
உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

காலவரையறையின்றி பிற்போடப்பட்ட மாகாண சபை தேர்தல்

”காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த
வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.

தேர்தல் முறைமையில்
காணப்படும் சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை கடந்த
அரசாங்கத்திடமும் வலியுறுத்தினோம்.

வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் போது மாகாண சபைகள் தேர்தலுக்கு நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன்
நாடாளுமன்றத்தால் தேர்தல் முறைமையை தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி
குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் விடயதானத்துக்குப்
பொறுப்பான அமைச்சர் மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராய விசேட
குழுவொன்றை அமைப்பார் என்று சபை முதல்வர் கூறியிருந்தார்.

பழைய விகிதாசார முறை

ஒரு வருடத்துக்குள் மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம்
மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தது.

பழைய விகிதாசார முறையில் இந்தத் தேர்தலை
நடத்துவதென்றால் மிக விரைவில் இதனை நடத்த முடியும் என்பதனால்
எதிர்க்கட்சியென்ற வகையில் எங்களால் முழுமையான ஒத்துழைப்பை வழங்க முடியும்.

மீண்டும் எல்லை நிர்ணயக் குழுவையோ அல்லது குழுவையோ நியமித்தால் காலமே
இழுத்தடிக்கப்படும்.

ஏதாவதொரு முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம்
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முரண்பாடற்ற வகையில் எடுக்கும்
தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.” என்றும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version