நாட்டில் மின் கட்டணத்தை 11 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலைகளையும் மேலும் குறைக்க முடியும் என ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையால் (CEB) சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்த யோசனை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் (CEYPETCO) மின்னுற்பத்திக்காக வழங்கப்படும் எரிபொருளுக்கான விலை தொடர்பான அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் குறித்த மாற்று யோசனை தயாரிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டண திருத்தம்
எனினும், 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு தற்போதுள்ள மின் கட்டணத்தை மாற்றமின்றி நடைமுறைப்படுத்த மின்சார சபை தற்போது முன்மொழிந்துள்ளது.
உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை சேகரிக்கும் பணிகள் இன்று (19) ஆரம்பமாகியுள்ளன .
அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வரை பொதுமக்கள் தங்களது ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.